இந்தியாவில் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களை உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் என அழைக்கிறோம். அந்த வகையில் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கோடக் மகேந்திரா வங்கியின் பிரைவேட் பேங்கிங் பிரிவு சார்பாக இந்தியாவை சேர்ந்த பணக்காரர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவை சேர்ந்த 12 நகரங்களில் வசிக்கும் 150 உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களிடம் கோடக் மகேந்திரா வங்கியின் பிரைவேட் பேங்கின் பிரிவு இந்த ஆய்வினை நடத்தி இருக்கிறது.

2024-25 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் 25 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்டு தனி நபர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி நேர்காணல் நடத்தியுள்ளனர்.
அப்போது அவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் கிடைக்கும் வரி சலுகை, பிள்ளைகளின் எதிர்காலம், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவையே இவர்களின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கின்றன.
மேலும் 25 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் தங்களுடைய முதலீட்டு போர்ட்போலியோவை பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது.
இதன்படி இவர்கள் உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் பங்குச்சந்தைகள் மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவுகளில் முதலீடு செய்வதில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் இந்த ஆய்வில் பங்கேற்ற மூன்றில் ஒரு பணக்காரர் வெளிநாட்டில் சொத்துக்களில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று காலத்திற்கு பின்னர் தான் பெரும்பாலான பணக்காரர்கள் தங்களுடைய முதலீட்டை பன்முகத்தன்மை படுத்த வேண்டும் என்ற மனநிலைக்கு மாறி இருக்கிறார்களாம். இதற்காகவே அவர்கள் வெளிநாட்டு ரியல் எஸ்டேடுகளையும் ஈக்விட்டி சந்தைகளையும் தேடி செல்கின்றனர் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் செலவினங்களில் பார்க்கும்போது அவர்கள் பெரும்பாலும் தங்களுடைய உடல் நலனை பேணி காப்பதற்கு அதிகமாக செலவிடுவதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக அதிகமாக செலவு செய்கிறார்களாம். மேலும் தங்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் தொழில் புரிய வேண்டும் என்பதற்காகவே பலரும் வெளிநாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக பதில் அளித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று செட்டிலாக விரும்புவதாக கூறும் பலரது விருப்பமான இடமாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. அங்கே வருமான வரி இல்லை என்பதையும் வாழ்க்கை தரம் சிறப்பாக இருப்பதையும் அவர்கள் காரணமாக முன் வைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications