டெல்லி : இந்தியாவில் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க மத்திய அரசு இறக்குமதியை ஊக்குவித்தது.
ஆனால் இதுவரை அது கைகொடுத்ததாக தெரியவில்லை. சில இடங்களில் சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாயை தொட்டுள்ளது. இதே பெரிய வெங்காயத்தின் விலையானது 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு வெங்காயத்தை வழங்கும், கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் விலை 140 ரூபாயை தொட்டுள்ளது. இதே பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க, அரசு எகிப்தில் இருந்து 6,090 மில்லியன் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தது. மேலும் இந்த வெங்காயமானது விரைவில் கப்பல் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்பட்டது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மாநில அரசுகளுக்கு 52 -55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் கருதப்பட்டது.
அதிகளவில் வெங்காயம் உற்பத்தி இடங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதால், இந்தியாவின் தேவைக்கு ஏற்ப வெங்காயம் இல்லை. இதனால் இப்படி தாறுமாறாக விலையேற்றம் கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சதத்தை தாண்டி இரண்டாவது சதமடிக்க முயன்று கொண்டிருக்கும் சின்ன வெங்காயத்தின் விலை, பொதுமக்களின் கண்ணில் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீரை வரவைக்கிறது.
இதே மற்றொரு சமயலறை பொருளான முருங்கைக் காய் சத்தமேயில்லாமல் மறுபுறம் விலை ஏறிக் கொண்டிருகிறது. ஒரு காயின் விலை 15 -20 ரூபாயாக விற்பனை செய்யப்பப்பட்டு வருகிறது.
இது குறித்து கோயம்பேடு வணிகர்கள் நலச் சங்கத்தின் பொருளாளர் பி சுகுமார் கூறுகையில், எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் விலையானது இன்னும் நகரத்தை அடையவில்லை. இதனால் வெங்காயம் விலை உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. சந்தையில் வெங்காயம் பதுக்கலுக்கான இடமும் இல்லை, சேமிப்பு வசதியும் இல்லை.
அதேபோல அரசு இஸ்ரேல் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள சேமிப்பு வசதிகளை அரசாங்கம் ஆராய வேண்டும். அங்கு வெங்காயம் திறந்த காற்றோட்டமான பகுதிகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் அங்கு வெங்காயத்தின் விலையானது எப்போதும் சீராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications