மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது (2014 - 15 காலகட்டங்களில்) இந்தியப் பொருளாதார சூழல்கள் அரசுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை கொடுப்பதாகவே இருந்தன. ஜிடிபி, தொழில் துறை உற்பத்தி, கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு... என பட்டியல் போடலாம்.
ஆனால் இன்று கதையே வேறு. இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த குரு பெயர்ச்சி அத்தனை சிறப்பாக அமையவில்லை. எங்கு தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. மத்திய அரசு தன்னால், என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து பார்த்தும் பொருளாதாரம், தன் போக்கில் சரிந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சரிவுக்கு எப்போது பிரேக் போடுவார்கள், யார் பிரேக் போடுவார்கள், எப்போது இந்தியப் பொருளாதார பழைய படி, மேல் நோக்கி நல்ல வளர்ச்சி காணும் என்று தெரியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு தான், நவம்பர் 2019-ம் மாதத்துக்கான Consumer Price Inflation என்று அழைக்கப்படும் நுகர்வோர் பணவீக்கம் வெளியானது. கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு நவம்பர் 2019-ம் மாதத்தில் நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. அதே போல நவம்பர் 2019-ம் மாதத்துக்கு உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில், அக்டோபர் 2019 மாதத்துக்கான Index of Industrial Production என்று அழைக்கப்படும் தொழில் துறை உற்பத்தி தரவுகளும் வெளியாயின. அக்டோபர் 2019 மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி -3.8 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது.
இதற்கு எல்லாம் முன்பே வந்த ஜிடிபி தரவுகள், இன்று வரை இந்திய பொருளாதாரம் தொடர்பான மேக்ரோ செய்திகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. செப்டம்பர் 2019 காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி 4.5 சதவிகிதமாக வளர்ச்சி சரிந்து இருப்பதாகச் சொல்கிறது. இன்று இந்த தரவுகளுடன் WPI - Wholesale Price Index என்று அழைக்கப்படும் மொத்த விலைக் குறியீடு இன்று வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு கடந்த நவம்பர் 2018 உடன் ஒப்பிடும் போது நவம்பர் 2019-ல் 0.58 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். குறிப்பாக உணவுகளுக்கான மொத்த விலைக் குறியீடு 11.08 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. நாம் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசி வருத்தப்பட்ட, வெங்காயத்துக்கு மட்டும் 172 சதவிகிதம் மொத்த விலைக் குறியீடு அதிகரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications