சென்னை: கிரெடிட் கார்டுகளை வாங்கவே முன்பெல்லாம் பயப்பட்ட இந்திய மக்கள், இப்போது டெபிட் கார்டுகள் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டு, டீ கடையில் கூட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர். இது இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றமாகும். மேலும் சேமிப்பையும், சிக்கனத்தையும் தலையாய மந்திரமாக கொண்டு இருந்த மக்கள் இப்போது கடன்களை வாங்கி குவித்து வருகின்றனர்.
கிரெடிட் கார்டு பயன்பாடு இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மார்ச் 2024 இல், ஆன்லைன் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் முதன் முதலாக ரூ.1,04,081 கோடியைக் கடந்துள்ளது. அதாவது 31 நாளில் 1 லட்சம் கோடியை மக்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தின் ரூ.86,390 கோடி ஒப்பிடும்போது 20% அதிகமாகும், இதேபோல் பிப்ரவரி 2024-ன் ரூ.94,774 கோடி உடன் ஒப்பிடும்போது 10% உயர்வாகும்.
இதேபோல் கடைகளில் (point-of-sale machines) செய்யப்படும் பரிவர்த்தனைகள் (ஆஃப்லைன்) மார்ச் 2024 இல் ரூ.60,378 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19% அதிகமாகும்.கிரெடிட் கார்டிலும் ஆன்லைன் பயன்பாடு அதிகம்.
மக்கள் கடந்த சில வருடங்களாக அதிகளவிலான கடன் வாங்குவது உயர்ந்துள்ளது. வீட்டுக்கடன், வாகன கடன், தங்க நகை கடன் இல்லாமல் பாதுகாப்பற்ற கடன்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இது மக்களின் வருமானத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை உண்மையாக்கும் வகையில் மொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மார்ச் 2024 இல் ரூ.1,64,586 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டை விட 20% அதிகமாகும்.
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரியில் முதன் முதலாக 10 கோடியைக் கடந்த கிரெடிட் கார்டுக்களின் எண்ணிக்கை, மார்ச் மாத இறுதியில் 10.2 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20% அதிகரிப்பு.
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களைச் சந்தை பங்கீட்டைப் பார்க்கும்போது, நடப்பு நிதியாண்டின் இறுதியில் ஹெச்டிஎஃப்சி வங்கி 20.2% சந்தை பங்கைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி.ஐ (18.5%), ஐசிஐசி வங்கி (16.6%), ஆக்சிஸ் வங்கி (14%), மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி (5.8%) ஆகியவை உள்ளன. டாப் 10 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகள் 90% பங்கைக் கொண்டுள்ளன.
கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாகப் பரிவர்த்தனைகளின் அளவும் அதிகரித்து வருகிறது. மார்ச் 2024 இல், கடைகளில் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் கடந்த ஆண்டை விட 28% உயர்ந்து 18 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் ஆன்லைன் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் 33% உயர்ந்து 16.4 கோடியாக இருந்தது.
இதேபோல் பரிவர்த்தனை எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வருகிறது, இதற்கு முக்கியமான காரணம், வாடிக்கையாளர்கள் குறைந்த தொகை பரிவர்த்தனைகளை அதிகளவில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்துகின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது.
UPI நெட்வொர்க்கில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதால் இந்த உயர்வு பதிவாகியிருக்கலாம். இதேவேளையில் டெபிட் கார்டு பயன்பாடு மார்ச் 2024ல் ஆப்லைனில் 30 சதவீதமும், ஆன்லைனில் 41 சதவீதமும் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications