அமெரிக்கா: சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனம் கூடிய விரைவில் சமூக வலை தள செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் ஓபன் ஏஐ நிறுவனம் தயாரித்த சாட்ஜிபிடி செயலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அனைத்து தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தும் ஒரு ஏஐ செயலியாக சாட் ஜிபிடி இருக்கிறது. இந்நிலையில் சாட்ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய சாம் ஆல்ட்மேன் கூடிய விரைவில் தங்களுடைய நிறுவனம் சமூக வலை தள செயலியை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சாட்ஜிபிடி செயலி பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய ஏஐ செயலியை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. அப்படி மெடா நிறுவனம் மெடா ஏஐ என்ற வசதியை கொண்டு வந்தது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளில் நாம் மெடா ஏஐ வசதியை பயன்படுத்த முடியும்.
கூடிய விரைவில் சாட் ஜிபிடிக்கு செயலிக்கு போட்டியாக மெடா ஏஐ என்ற தனி செயலியை கொண்டு வருவதற்கு மார்க் திட்டமிட்டுள்ளார். இந்த செய்தி வெளியானதை அடுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள சாம் ஆல்ட் மேன் ஓபன் ஏஐ கூடிய விரைவில் ஒரு புதிய சமூக வலை தள செயலியை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் சாட் ஜிபிடிக்கு போட்டியாக ஒரு செயலியை கொண்டு வருகிறது என்றால் நாங்கள் பேஸ்புக்கிற்கு போட்டியாக ஒரு செயலியை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.
மெடா நிறுவனம் சமூக வலைதளம் மற்றும் ஏஐ தொழில்நுட்ப பிரிவில் முன்னணியில் இருக்க வேண்டும் என தீவிரமாக போட்டியிட்டு வருகிறது. இதற்காக மெட்டா ஏஐ செயலியை பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறது. அது தவிர ரீஸ்கள் மட்டுமே பதிவிடுவதற்கான ஒரு செயலியும் கூடிய விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திருப்பதால் அதேபோன்ற வீடியோவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயலியை கொண்டு வருவதற்கான பணிகளை மெடா நிறுவனம் தீவிரப்படுத்தி இருக்கிறதாம். மெடா நிறுவனத்தில் தற்போது பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை தனித்தனி செயலிகளாக இயங்குகின்றனவோ அதேபோல மெடா ஏஐ-யும் தனி செயலியாக இயங்கும்.
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டிலேயே இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட் ஜிபிடி, ஜெமினி ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் வரவேண்டும் என மார்க் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications