ஓபன் ஏஐ நிறுவனம், உலகளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு போட்டியில் முன்னணியில் தனது ஆயிரம் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகைகள் ஆயிரங்களில் தொடங்கி, மில்லியன் டாலர்கள் வரை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவை பெரும்பாலும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஊக்கத் தொகையின் அளவு பணியாளர் திறன், அனுபவம் மற்றும் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். பணியாளர்கள், இந்த ஊக்கத்தொகைகளை நகையாகவோ அல்லது பங்குகளாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டம், மிகுந்த போட்டியுள்ள தொழில்நுட்ப வேலைவாய்ப்புச் சூழலில், சிறந்த திறமைகள் கொண்ட பணியாளர்களை நிறுவனம் இழக்காமல் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது தொழில்நுட்ப பணியாளர்களுக்கான போட்டி அவரது வாழ்க்கையில் பார்த்த மிகவும் கடுமையான சந்தையாக இருப்பதாக தெரிவித்தார்.
இது என் தொழில்முறை வாழ்க்கையில் நான் பார்த்த அதிகமான போட்டி இருக்கும் திறமை சந்தையாகும். திறமை உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் மிகக் குறைவான சில நூறு பேருக்காகவே மிகவும் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது. சூப்பர் நுண்ணறிவு (super intelligence) என்பதை உருவாக்க, உலகளவில் சிலருக்கு மட்டுமே திறமைகள் உள்ளன. அதை உண்மையில் புரிந்து கொண்டு செயல்படுத்தக் கூடியவர்கள் ஒரு நடுத்தர அளவிலான சிறிய கூட்டம் தான்" என்று தெரிவித்துள்ளார்.
ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மன் சமீபத்தில், சிறந்த AI ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த தேவை இருப்பதால், அவர்கள் உருவாக்கும் மாபெரும் பொருளாதார மதிப்பை குறிப்பிட்டார். ஏனெனில், ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள், பில்லியன் கணக்கில் கணினி வளங்கள் மற்றும் கட்டமைப்புகளில் முதலீடு செய்து வருகின்றன.
இந்நிலையில், மெட்டா நிறுவனம் சமீப காலங்களில் ஓபன் ஏஐயில் இருந்து பல முக்கியமான திறமைகளை நியமித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெட்டா தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க், தனது Meta Superintelligence Labs எனும் புதிய AI பிரிவுக்கு மிகுந்த முன்னுரிமை அளித்து, குழுவை விரைவாக கட்டமைத்து வருகிறார்.
மெட்டா நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஊக்கத் தொகை வழங்குகிறது. மேலும் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 300 மில்லியன் டாலர் சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, ஓபன் ஏஐ பலரால் எதிர்பார்க்கப்பட்ட GPT-5 மாடலை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. இது, இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடல்களில் அதிக புத்திசாலித்தனமும், திறமையும் கொண்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, "இது துல்லியமானது, அதிக செயல்திறன் கொண்டது, தவறான தகவல்களை குறிப்பிடும் வீதம் குறைவாக உள்ளது" என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications