ஏஐ தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் பல நன்மைகள் இருந்தாலும் எதிர்காலத்தில் பல ஆபத்துகளுக்கும் வாய்ப்புள்ளது என தொடர்ச்சியாக குரல்கள் எழ தொடங்கியுள்ளன. ஏஐ நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களே இத்தகைய எச்சரிக்கையை வெளியிடுவது அதிர்ச்சியை தந்துள்ளது.
சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜாகுப் பச்சோக்கி ஏஐ-ஆல் ஏற்படும் ஆபத்துகளுக்கு மனித குலம் துளி கூட தயாராக இல்லை என கூறியுள்ளார். An Alien Mind என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பிளாக் பதிவில், எதிர்கால ஏஐ அமைப்புகளின் ஆபத்தான பரிணாம வளர்ச்சி குறித்தும், அதை கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

இதுவரை நாம் ஏஐ-ஐ வெறும் ஒரு கருவியாக மட்டுமே பார்த்து வருகிறோம். ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் மேம்பட்ட ஏஐ ஏஜெண்டுகள் தங்களுக்கென தனிப்பட்ட குறிக்கோள்களை உருவாக்கி கொள்ளும் என எச்சரிக்கிறார். இந்த ஏஐ அமைப்புகள் தங்களின் குறிக்கோள்களை எட்ட மனிதர்களை ஏமாற்றுவது அல்லது மிரட்டுவது போன்ற வழிகளிலும் ஈடுபடலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
ஏஐ துறையில் இருக்கும் மிகப்பெரிய சவாலே ,ஏஐ-இன் சிந்தனை மனிதர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதி செய்வது தான் என கூறும் அவர் ஏஐ தொழில்நுட்பத்தை எந்தவொரு நிறுவனமும், Alignment மற்றும் Monitoring சவால்களுக்கு முழுமையான தீர்வு காணவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது ஏஐ கட்டுப்பாட்டை மீறும் போதும் தன்னிச்சையாக செயல்படும் போதும் அதன் விளைவுகளை சமாளிக்க யாரும் தயாராக இல்லை என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஏஐ நிறுவனங்கள் தங்களது ஆய்வுகளை தாமாகவே முன்வந்து சற்று மெதுவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏஐ மாடல்கள் மனிதர்களின் உதவியின்றி தங்களை தாங்களே சுயமாய் மேம்படுத்தி கொள்ளும் திறனை பெற்று வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த வேகம் தொடர்ந்தால், ஏஐ-ன் உண்மையான நுண்ணறிவை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலை உருவாகும் என்கிறார்.
அண்மையில் ஓபன்ஏஐ-ன் சில ஏஐ ஏஜெண்டுகள் மனிதர்களை ஏமாற்றி ஹேக்கிங்கில் ஈடுபட்டதை குறிப்பிடும் அவர், இந்த சவாலை தனிப்பட்ட ஏஐ நிறுவனங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாது. உலக நாடுகளின் அரசுகள் இணைந்து எதிர்கால ஏஐ வளர்ச்சிக்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை உடனடியாக முதன்மை படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications


