ஆந்த்ரோபிக் நிறுவனம் பென்டகன் விதிமுறைக்கும், கட்டுப்பாடுகளுக்கும் இணங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள வேளையில் டிரம்ப் அனைத்து அரசு அமைப்புகளையும், அடுத்த 6 மாதத்திற்குள் ஆந்த்ரோபிக் பயன்படுத்துவதை முழுமையாக கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பென்டகன் இரவோடு இரவாக OpenAI உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பென்டகன் ஏஐ மாடலை பயன்படுத்த palantir technologies உடன் இணைந்து ஆந்த்ரோபிக் ஏஐ சேவையை தனது டெக் தளத்தில் பயன்படுத்தி வந்தது. இதற்காக பென்டகன மற்றும் ஆந்த்ரோபிக் சுமார் 200 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆந்த்ரோபிக் பென்டகன் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்துள்ள காரணத்தால் இந்த 200 மில்லியன் டாலர் ஒப்பந்தம் OpenAI நிறுவனத்திற்கு சென்றுள்ளது.

ஓபன்ஏஐ நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், அமெரிக்க பாதுகாப்புத்துறை (Department of War) உடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, ஓபன்ஏஐ-யின் AI மாடல்களை அமெரிக்க ராணுவத்தின் ரகசிய நெட்வொர்க்குகளில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. X பதிவின் மூலம் உலகிற்கு இதை அறிவித்த சாம் ஆல்ட்மேன், "இன்றிரவு பாதுகாப்புத்துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் முக்கிய நோக்கம் AI-யை பாதுகாப்பாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவது தான் என்று சாம் ஆல்ட்மேன் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பும் AI பயன்பாட்டுக்கு கடுமையான பாதுகாப்பு கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
குறிப்பாக, அமெரிக்கர்கள் மீது பரந்த அளவிலான கண்காணிப்பு (mass domestic surveillance) செய்யக்கூடாது, ராணுவ தாக்குதல் முடிவுகளை மனிதர்கள் இல்லாமல் AI எடுக்கக்கூடாது (human responsibility for use of force) என்ற இரண்டு முக்கிய கொள்கைகள் இதில் உள்ளன. இவை ஓபன்ஏஐ-யின் அடிப்படை கொள்கைகள், அமெரிக்க அரசும் சட்டம் மற்றும் கொள்கையில் இவற்றை பின்பற்றுவதாகவும், ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளதாகவும் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் ஆல்ட்மேன் தனது ஊழியர்களிடம் "safety stack" என்ற தொழில்நுட்ப, கொள்கை, மனித கட்டுப்பாடு அமைப்பை நிறுவனமே உருவாக்க அமெரிக்க அரசு அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார். இந்த அமைப்பு AI மாடலுக்கும் உண்மையான பயன்பாட்டுக்கும் இடையே இருக்கும் கட்டுப்பாட்டு அடுக்கு. AI ஒரு பணியை மறுத்தால், அரசு அதை கட்டாயப்படுத்தாது என்பதை இந்த கட்டமைப்பு மூலம் உறுதி செய்யப்படும்.
இந்த ஒப்பந்தம் AI தொழில்நுட்பத்தின் ராணுவ பயன்பாடு குறித்து உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்கள் பாதுகாப்பு கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் ராணுவத்துடன் ஒத்துழைப்பது பெரும் சவாலாக இருந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இதற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications