சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம் என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அரசால் கொண்டுவரப்பட்ட பிரபலமான சேமிப்புத் திட்டமாகும். முன்பு இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு பல கணக்குகளை திறந்துள்ளனர். சமீபத்தில் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் உட்பட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களில் முறைகேடாக திறக்கப்பட்ட 2, 3 கணக்குகளை சீர் செய்யும் பொருட்டு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இந்தப் புதிய வழிகாட்டுதல்களின் படி உங்கள் மகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட SSY கணக்குகளைத் திறந்திருந்தால் என்ன நடக்கும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒழுங்கற்ற கணக்குகளுக்கான அரசாங்கத்தின் முக்கிய விதிமுறைகள்: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் போன்ற பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் முறைகேடுகளை தடுப்பதற்காக ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்று இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டது.
ஒரு கணக்கு: ஒரு பெண் குழந்தைக்கு பல்வேறு SSY கணக்குகள் இருப்பது ஒழுங்கற்ற கணக்காக கருதப்படும். தனிநபர் அல்லது அந்த குழந்தையின் தாத்தா, பாட்டி என யார் கணக்கு திறந்திருந்தாலும் ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட SSY கணக்குகள் இருக்கக் கூடாது.
பாதுகாவலரின் மாற்றம்: SSY கணக்கை தங்கள் பேத்திக்காக தாத்தா, பாட்டி அல்லது வேறு அங்கீகரிக்கப்படாத பாதுகாவலர் தொடங்கியிருந்தால் அந்தக் கணக்கு குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்றப்பட வேண்டும். பொதுவாக பெற்றோர் இருக்கும் குழந்தைகளாக இருந்தால் பெற்றோருக்கு மாற்றப்பட வேண்டும்.
கூடுதல் கணக்குகள் மூடப்படும்: புதிய வழிகாட்டுதல்களின் படி ஒரு குழந்தைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட SSY கணக்குகள் திறக்கப்பட்டிருந்தால் கூடுதல் கணக்குகள் மூடப்படும். மேலும் கூடுதல் கணக்குகளில் இருக்கும் டெபாசிட் எந்தவித வட்டியும் இன்றி திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் தாக்கம்: இது போன்ற புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் கணக்குகளை தவறான நோக்கங்களுக்காக குழந்தையின் சட்டபூர்வ பாதுகாவலர் அல்லாதவர்கள் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். இதனால் முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். SSY திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதாகும். இந்தப் புதிய விதிகள் SSY திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக பூர்த்தி செய்ய உதவும்.
மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் திட்டத்தின் நலன்கள் சென்றடையச் செய்யும். ஒழுங்கற்ற கணக்குகள் மூடப்படுவதால் திட்டத்தின் நலன்கள் ஒரே குடும்பத்தைச் சேர்வதற்கு மாறாக தேவைப்படும் அனைத்து குழந்தையையும் போய் சேரும். இத்திட்டத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டு முதலீடு செய்வார்கள்.
தபால் நிலையங்களின் பங்கு: இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் முறைகேடாக வழங்கப்பட்ட கணக்குகளை கண்டறிய உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களை சேகரிக்கவும், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் கணக்குகளை முறைப்படுத்தவும், எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications