இஸ்லாமாபாத்: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு தன்னுடைய ராணுவ தலைமையகத்தை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
நியூஸ் 18 செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டு இருப்பதாக மணிகண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தான் அரசு தன்னுடைய ராணுவ தலைமையகத்தை ராவல் பிண்டியின் சக்காலா பகுதியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது மேலும் பயங்கரவாத முகாம்களையும் அளித்தது. மே 7ஆம் தேதி பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கியது. மே10ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கியமான விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான பல்வேறு விமானப்படைத்தளங்கள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. சீனாவை சேர்ந்த மிசாஸ் விஷன் என்ற நிறுவனம் பாகிஸ்தானின் குறிப்பிட்ட சில விமான படைத்தளங்கள் இந்திய ராணுவத்தின் தாக்குதலை அடுத்து சேதமடைந்திருப்பது தொடர்பான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு இருந்தது.
மே 10ஆம் தேதி இந்தியா நடத்திய இந்த துல்லிய தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவ தளபதியான அசிம் முனிர் ராவல் பண்டியில் இருக்கும் ராணுவ தலைமையகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் பதுங்கு குழியில் சென்று பதுங்கிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்திய ராணுவத்தின் தாக்குதலில் நூர் கான் விமானப்படை தளம் கடுமையாக சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் இந்திய ராணுவத்தின் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் தன்னுடைய ராணுவ தலைமையகத்தை இடமாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக நியூஸ் 18 செய்தி குறிப்பிடுகிறது. OSINT update என்ற எக்ஸ் தள பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மட்டுமில்லாமல் ராணுவ தளபதியின் குடியிருப்பையும் இடமாற்றம் செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் தான் நூர்கான் விமான படைத்தளம் அமைந்திருக்கிறது. இது பாகிஸ்தான் ராணுவத்தின் மிக முக்கியமான ஒரு விமானப்படை தளமாக இருக்கிறது.
குறிப்பாக விமானப்படை வீரர்கள் பெரும்பாலானவர்கள் இங்கு தான் தங்களுக்கான பயிற்சி பெறுவார்கள் அது தவிர விமானப்படைக்கு தேவைக்கான பல்வேறு ஆயுதங்களும் வெடிபொருட்களும் இங்குதான் வைக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான பல்வேறு போர் விமானங்களும் இந்த விமானப்படை தளத்தில் தான் நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த மையம் இந்திய ராணுவத்தின் தாக்குதலில் சேதமடைந்து இருப்பதே பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications