பஞ்சாப்: கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆபரேஷன் சிந்தூர்: இதனை அடுத்து பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பயங்கரவாத முகாம்களை அழித்தது. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிற்கு டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் உடன் எல்லையை பகிரும் அனைத்து மாநிலங்கள் மீது டிரோன்கள் வீசப்பட்டன. இந்திய ராணுவம் தன்னுடைய டிரோன் பாதுகாப்பு அமைப்பு மூலம் அவற்றை எல்லாம் அழித்தது.

24 மணி நேரமும் பாதுகாப்பு பணி: பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த செயல்களை அடுத்து எல்லை மாநிலங்களில் எல்லாம் ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் என எல்லையில் ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டனர். இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு 10 வயது சிறுவன் தானாக முன்வந்து உதவி செய்து கவனம் பெற்றார்.
10 வயது சிறுவனின் துணிச்சல்: பஞ்சாப் மாநிலத்தில் தாரா வாலி என்ற கிராமத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, 10 வயது சிறுவனான ஷவன் சிங் ராணுவ வீரர்களுக்கு பால் ,தண்ணீர் ,தேனீர், லெஸ்ஸி போன்ற பானங்களை வழங்கி உதவி செய்து இருக்கிறார். தானாக முன்வந்து எந்தவித பயமும் இல்லாமல் , ராணுவ வீரர்களுக்கு உதவிகளை வழங்கிய சிறுவனை இராணுவத்தினர் அப்போதே பாராட்டினர்.
ராணுவ வீரர்களுக்கு உதவி: தாரா வாலி என்பது சர்வதேச எல்லையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்த ஷவன் சிங் ராணுவ வீரர்களுக்கு பால், தேனீர் உள்ளிட்ட பானங்களை வழங்கி உதவி செய்திருக்கிறார். நாங்கள் யாரும் கூறாமல் அவனே தானாக முன்வந்து வீரர்களுக்கு உதவி செய்ததாக அவர் தந்தை பெருமையுடன் தெரிவிக்கிறார். தற்போது 4ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் பெரியவன் ஆன உடன் தான் ராணுவ வீரர் ஆக போவதாகவும் நாட்டிற்காக சேவை செய்ய போவதாகவும் கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார்.
கல்வி செலவை ஏற்றது ராணுவம்: முன்னதாக சிறுவன ஷவன் சிங்குக்கு ராணுவத்தின் மேற்கு படை பிரிவு லெப்டினண்ட் ஜெனரல் மனோஜ் குமார் பாராட்டு தெரிவித்து கௌரவித்தார். இந்நிலையில் சிறுவனின் துணிச்சலை பாராட்டி அவரது கல்விச் செலவு முழுவதையுமே இந்திய ராணுமே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளியில் பெரிய அளவு அறியப்படாமல் இந்த நாட்டுக்காக துணிச்சலாக வந்து நின்ற சிறுவனை அங்கீகரிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பை எடுத்திருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications