IT துறையில் சில காலமாக பணி நீக்கங்களுக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவுகிறது. ஒருபுறம் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பணி நீக்கம் செய்யப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் நிபுணர்னர்கள், நிறுவனங்கள் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினையை பணி நீக்கங்களுக்கு காரணம் என்று கூறுகின்றனர். இதில் எது உண்மை என்பதை ஆராய்வதற்குள் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் குறைக்கத் தொடங்கிவிட்டன.
அந்த வரிசையில் ஆரக்கிள் நிறுவனமும் இணைந்துள்ளது. தொடர்ந்து தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது. ஜூன் 1 முதல் ஜூன் 15ஆம் தேதிக்குள் கிட்டத்தட்ட 30,000 ஊழியர்களை குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, உலகளவில் ஆரக்கிள் நிறுவனம் கொண்டிருக்கும் பணியாளர்களில் இந்த விகிதம் சுமார் 18 சதவீதமாகும்.
ஒரு நிறுவனம் எப்போது பணியாளர்களை குறைக்கும்? ஒரு வேலை தங்களுடைய வருடாந்திர வருமானம் குறைந்துவிட்டாலோ அல்லது நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலோ ஆட்களைக் குறைக்கும். ஆனால் ஆரக்கிள் நிறுவனம் இந்த 2 காரணங்களுக்காகவும் தங்கள் ஊழியர்களை குறைக்கவில்லை.

சமீபத்தில் ஆரக்கிள் நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் 3-ஆம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் வருவாய் 17.2 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானம் சுமார் 22 சதவீதம் அதிகமாகும்.
கிளவுட் ஆப்பரேஷன்ஸ் மூலம் கிடைத்த வருமானம் 8.9 பில்லியனை எட்டியுள்ளது. கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 44 சதவீத அதிக வருமானம் கிடைத்துள்ளது. மேலும் கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 243 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
சரி நிறுவனமும் நன்றாக செயல்படுகிறது.. வருமானமும் அதிக அளவில் கிடைத்திருக்கிறது.. அப்படியானால் ஏன் இந்த பணிநீக்கம்? என்று தானே கேட்கிறீர்கள். முழுக்க முழுக்க ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
AI மூலம் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் அதிகரித்ததை தொடர்ந்து இனிவரும் காலங்களில் சுமார் 50 பில்லியனை ஏஐ உள்கட்டமைப்பிற்காகவும், டேட்டா சென்டரை மேம்படுத்தவும் ஆரக்கிள் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. அதோடு ஓபன் AI மற்றும் சாஃப்ட்பேங்க் ஆகியவற்றுடன் இணைந்து ஸ்டார்கேட் என்ற பிரம்மாண்ட ஏஐ திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் பழைய தொழில்நுட்பங்களை நீக்கிவிட்டு அங்குள்ள ஊழியர்களை குறைத்து, அந்தப் பணத்தை அப்படியே வேறு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே AI தொடர்பான ஆர்டர்கள் நிறுவனத்திற்கு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் நிறுவனத்திற்கு 135 பில்லியன் டாலர் கடனும் இருக்கிறது. எனவே கையில் இருக்கும் பணத்தை ஊழியர்களின் சம்பளத்திற்கு செலவு செய்யாமல் கடனை அடைப்பதற்கும், AI-யில் முதலீடு செய்வதற்கும் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications