உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் பொழுதுபோக்கு துறையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் மக்கள் தியேட்டருக்கு செல்வது குறைத்து வரும் வேளையில் நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளம் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கவும், மேம்படுத்தவும் அவ்வபோது கண்டென்ட்களை வாங்கும், சில நேரத்தில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்களையும் வாங்கும். இப்படி பொழுதுபோக்கு துறையில் மிக முக்கியமான ஒப்பந்தத்தை செய்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஹாலிவுட்டின் பழம்பெரும் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட-தொலைக்காட்சி ஸ்டுடியோக்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை 72 பில்லியன் டாலர் அதாவது சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம், ஸ்ட்ரீமிங் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார்னர் பிரதர்ஸ் என்றாலே நினைவுக்கு வருவது கேம் ஆஃப் திரோன்ஸ், ஹாரி பாட்டர், டிசி காமிக்ஸ் (சூப்பர்மேன், பேட்மேன்), லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற உலகளவில் பிரபலமான சீரியஸ், திரைப்படங்களும் தான். இந்த ஒப்பந்தம் மூலம் இனி அனைத்தும் நெட்ஃபிளிக்ஸ் கட்டுப்பாட்டிற்கு வரும்.
இதுவரை டிவி சேனல்கள் (HBO, CNN) உட்பட முழு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தையும் வாங்க பலர் போட்டியிட்டனர். ஆனால் நெட்ஃபிளிக்ஸ், ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் பிரிவை மட்டும் தனியாக வாங்கி, மற்ற கேபிள் சேனல்களை தனியாக பிரிக்கும் திட்டத்தை முன்வைத்து வெற்றி பெற்றுள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் வார்னர் பிரதர்ஸ் பங்கு விலை 24.5 டாலராக முடிந்தது. இதன்படி நிறுவனத்தின் மொத்த மதிப்பு 61 பில்லியன் டாலர். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் ஒரு பங்குக்கு கிட்டத்தட்ட 28 டாலர் கொடுக்க முன்வந்தது இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
நெட்ஃபிளிக்ஸ் உடன் பரமவுண்ட் ஸ்கைடான்ஸ் போட்டிப்போட்டது, இந்த நிறுவனம் சுமார் 24 டாலர் கொடுத்த முன்வந்தது. இப்போட்டியில் பல வார ஆலோசனைக்கு பின்பு வார்னர் பிரதர்ஸ் நிர்வாகம் நெட்ஃபிளிக்ஸை தேர்ந்தெடுத்தது. இந்த ஒப்பந்தம் முடிந்தால், நெட்ஃபிளிக்ஸ் ஹாலிவுட்டின் மிகப்பெரிய கண்டென்ட் உரிமையாளராக மாறும்.
நெட்ஃபிளிக்ஸ் இதுவரை பெரிய ஸ்டுடியோக்களை வாங்காமலேயே உலகின் டாப் ஸ்ட்ரீமிங் நிறுவனமாக உருவான நிலையில் இப்போது டிஸ்னி, பரமவுண்ட் போன்ற நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.
இதேவேளையில் நெட்ஃபிளிக்ஸ் தனக்கென பிரத்தியேக தொடர்கள், திரைப்படங்களை உருவாகி உரிமை பெற்று வருகிறது. மேலும் கேமிங் துறைக்கும் செல்ல திட்டமிட்டுள்ள வேளையில் இனி வரும் காலத்தில் அதகளவிலான வளர்ச்சியை பதிவு செய்யும்.


Click it and Unblock the Notifications