நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் மொபைல் எண்களில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ பணப்பரிவர்த்தனையை செயல்படுத்த முடியாது என தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமேசான் பே, கூகுள் பே, பேடிஎம், பீம், பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளின் மூலம் நாம் எளிதாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது. நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது என பல்வேறு சேவைகளுக்கும் நாம் தற்போது பெரும்பாலும் யூபிஐ செயலிகளை தான் பயன்படுத்துகிறோம்.

இந்த நிலையில் தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ, யுபிஐ ஐடிகளில் பயன்படுத்தப்படும் மொபைல் எண்கள் தொடர்பான ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி ரீசார்ஜ் செய்யாததால் அழைப்பு உள்ளிட்ட எந்த சேவையும் இல்லாத எண்ணை கொண்டு யுபிஐ பயன்படுத்துவோர் மற்றும் தன்னுடைய செல்போன் எண்ணை மாற்றி விட்டு வங்கி கணக்கில் அந்த விவரத்தை மாற்றாமல் , அதாவது பழைய எண்ணை நீக்காமல் வைத்திருப்போர் மற்றும் யுபிஐயில் இருக்கும் மொபைல் எண் அந்த குறிப்பிட்ட நபர் ரீசார்ஜ் செய்யப்படாமல் விடுத்து வேறு யாருக்கேனும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், இனி அந்த எண்களில் யுபிஐ இயங்காது என தெரிவித்துள்ளது.
எனவே நீங்கள் உங்களுடைய வங்கியை அணுகி உங்கள் செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் இனிவரும் நாட்களில் தடை இல்லாமல் யுபிஐ சேவையை பெற முடியும். அதாவது யுபிஐ உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாட்கள் வரை செயலற்றதாக இருந்தால் அதன் யுபிஐ சேவைகள் செயலிழக்க செய்யப்படும் என்பதுதான் என்பிசிஐ வெளியிட்டுள்ள இந்த விதிமுறையின் விளக்கமாகும்.
நீண்ட காலம் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களை வங்கிகள், பேமெண்ட் சேவை வழங்குனர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு யுபிஐ சேவை வழங்குனர்களான போன் பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் வாரம் தோறும் Mobile Number Revocation List/Digital Intelligence Platform ஆகியவற்றில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி அப்டேட் செய்து கொள்ள வேண்டும், பயன்பாட்டில் இல்லாத எண்களை நீக்க வேண்டும் என்றும் என்பிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
இதனால் செயலற்ற மொபைல் எண்கள் மற்றும் வேறு நபருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்கள் காரணமாக ஏற்படக்கூடிய பரிவர்த்தனை தவறுகளை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மொபைல் எண் தொடர்ந்து 90 நாட்கள் வரை எந்தவித அழைப்பும் இல்லாமல் ,இணைய சேவை பயன்படுத்தாமல், எஸ்எம்எஸ் கூட செல்லாமல் இருக்கிறது எனும் போது குறிப்பிட்ட அந்த தொலை தொடர்பு நிறுவனம் அந்த எண்ணை செயலிழக்கச் செய்து விடும் அல்லது புதிய நபருக்கு அந்த எண்ணை ஒதுக்கீடு செய்து விடும்.
இதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும் போது அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழி வகுக்கும் என்பதால் இந்த முக்கியமான விதிமுறையை கொண்டு வந்திருப்பதாக என்பிசிஐ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications