சென்னை: உலக அளவில் முன்னனி செல்போன் விற்பனை நிறுவனமாக ஆப்பிள் திகழ்ந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்கு சொந்தமான ஐபோன்கள் பெரும்பாலும் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் இருந்த உற்பத்தி நிலையங்களை ஆப்பிள் நிறுவனம் மற்ற நாடுகளுக்கு மாற்றி வருகிறது.
அந்த வகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஆப்பிளுக்கு அதிக அளவில் ஐபோன் உற்பத்தி செய்து தரும் ஒரு நாடாக இந்தியா இருக்கிறது. உலகளவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களில் 20 சதவீத போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களுடைய ஐபோன் உற்பத்தி ஆலைகளை நிறுவியிருக்கின்றன. ஃபாக்ஸ்கான் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தன்னுடைய ஆலையில் ஐபோன்களை உற்பத்தி செய்து இந்திய சந்தைக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஐபோன் உற்பத்தியை பெருக்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறது. இந்த சூழலில் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீனாவை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களையும் அழைத்து வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஆலைகளில் பணிக்கு அமர்த்தி இருந்தது.
ஐபோன் உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் இவர்களை கொண்டு இந்திய பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென ஃபாக்ஸ்கான் ஆலைகளில் பணியாற்றி வந்த 300க்கும் அதிகமான சீனாவை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை மீண்டும் தாய் நாட்டிற்கே சென்றுவிட்டார்களாம். இதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகவில்லை.
சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தாயகத்திற்கு திரும்பி அனுப்பிருப்பதன் மூலம் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற இலக்கு பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த பொறியாளர்கள் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதால் ஐபோன் 17 உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

இது தவிர நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பெருக்குவதற்கு தேவையான முக்கியமான உபகரணங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் சீன் அரசாங்கம் வேண்டுமென்றே இந்த உபகரணங்களை சீனாவில் இருந்து வெளியேற்றாமல் துறைமுகங்களிலேயே முடக்கி வைத்திருக்கிறது . இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை பெருக்குவதில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தான் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் தன்னுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது. அண்மையில் கூட இந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்து தங்கள் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்தியது.
இதனிடையே சீன பொறியாளர்களுக்கு பதிலாக தைவான் மற்றும் வியட்நாம் நாடுகளில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களையும் பொறியாளர்களையும் அழைத்து வந்து வேலை செய்வதற்கு ஃபாக்ஸ் தான் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஐ போன் உற்பத்தியை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications