சென்னை: கடந்த 2 வருடங்களில் குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் இந்திய மக்களிடையே அதிகரித்து வருகிறது என்று கண்டர் FMCG பல்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. 2024-ஆம் நிதி ஆண்டில், ஆண்டுதோறும் 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய வீடுகள் குளிர்பானங்களை வாங்கிப் பயன்படுத்தியுள்ளன. மேலும், வரவிருக்கும் கடுமையான கோடை காலத்தில் இந்த போக்கு மேலும் அதிகரிக்கும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில், இந்திய வீடுகளின் சராசரி குளிர்பான நுகர்வு 250 மில்லி லிட்டர் அதிகரித்துள்ளது. இது நுகர்வோர் விருப்பங்கள் குளிர்பானங்கள் பக்கம் சாய்ந்து வருவதை காட்டுகிறது. அதே அறிக்கையில், பாரம்பரியமாக துணி துவைக்கும் தயாரிப்பாகக் கருதப்பட்ட fabric softeners தற்போது நாடு முழுவதும் நான்கு வீடுகளில் ஒன்றில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், FMCG நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய துணி துவைக்கும் தயாரிப்பான வாஷிங் லிக்விட்ஸ், 2024-ஆம் நிதி ஆண்டில் 1,00,000 டன் என்ற இலக்கை தாண்டியுள்ளது. அதேபோல, 2023-ஆம் ஆண்டின், மார்ச் மாதத்தில், கடந்த 12 மாதங்களில் (moving annual total - MAT) வீடுகளின் குளிர்பான நுகர்வு 41 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மட்டுமல்லாமல், 2024-ஆம் ஆண்டில், மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 19 சதவீத வளர்ச்சியுடன் மேலும் பல வீடுகள் குளிர்பானங்களை வாங்கத் தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர்கள், இப்போது FMCG தயாரிப்புகளை ஆண்டுக்கு 156 முறை, ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் சராசரியாக 56 மணிநேரத்திற்கு ஒருமுறை வாங்குவதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிய அளவிலான பேக்குகளில் இருக்கும் பொருட்களை வாங்குவதைவிட பெரிய பேக்குகளில் இருக்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்ந்தெடுத்து வருகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. இதன் பொருள் இனிவரும் காலங்களிலும் நுகர்வோர் பெரிய அளவிலான பொருட்களை வாங்க தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, பணவீக்கம் நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு மிதமானதாக இருந்தாலும், அதன் தாக்கம் நுகர்வோரால் தொடர்ந்து உணரப்படுகிறது என்று அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதிக விலையுள்ள பிரீமியம் தயாரிப்புகள், உதாரணமாக துணி துவைக்கும் திரவ சோப்புகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற லாபகரமான பொருட்களின் விற்பனை சிறப்பாக இருந்தாலும், மளிகைப் பொருட்களே இன்றும் வீடுகளின் மிகப்பெரிய செலவுகளில் ஒன்றாக உள்ளன. அறிக்கையின்படி, மொத்த காலாண்டு செலவுகளில் 24 சதவீதத்திற்கும் அதிகமாக மளிகைப் பொருட்களுக்கே செலவழிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications