சென்னை: இந்தியாவையே அதிரடித்த பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பினால் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒரேநிமிடத்தில் செல்லாத நோட்டுகளாகிவிட்டன.
இதைத்தொடர்ந்து புதிதாக 500, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இதில் 2000 ரூபாய் நோட்டுகள் சுமார் 4 லட்சம் கோடி மதிப்புக்கு அச்சடிக்கப்பட்டன.

இந்தப் புதிய நோட்டுகள் சில ஆண்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில் இந்தாண்டு திடீரென்று 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மே மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது. மக்கள் தங்கள் வசம் உள்ள நோட்டுகளை வங்கிகளில் தந்து அதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
2000 ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை தரப்பட்டது.
இந்நிலையில் தற்போது 2023 நவம்பர் 30ஆம் தேதிப்படி புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டின் மொத்த மதிப்பு ரூ.9,760 கோடி மட்டுமே என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
97.26 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டது என்றும் அவற்றை மாற்றிக் கொள்வதற்காக 19 உதவி மையங்கள் செயல்படுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட சமயத்தில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
தொடக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், டெபாசிட் செய்வதற்கும் செப்டம்பர் 30ஆம் தேதிவரை நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இத்துடன் ரிசர்வ் வங்கியின் 19 மையங்களிலும் நோட்டுகளை மாற்றும் வசதி இருந்தது. பின்னர் அக்டோபர் 7ஆம் தேதி இதற்கான கெடு நீட்டிக்கப்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் அனுமதிக்கப்பட்டது.
தற்போதுள்ள 19 ரிசர்வ் வங்கி அலுவலக கிளை மையங்களுக்கு பொதுமக்கள் நேரிடையாகவோ அல்லது நாட்டிலுள்ள எந்த போஸ்ட் ஆபிஸ் மூலம் இருந்தும் தபால் வழியாக 2000 ரூபாய் நோட்டுகளை அனுப்பலாம். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு இன்னும் சட்டப்படியான மதிப்பு தொடர்கிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் வசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக மாற்றிக் கொள்வது நல்லது.
இதற்கு எந்த கேள்வியும் இருக்காது என்பதால் பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் தாராளமாக முன்வந்து தங்களிடமுள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications