சென்னை: இந்தியாவில் ரெடிமேடு உணவு பொருட்களை விற்பனை செய்து வரக்கூடிய எம்டிஆர் நிறுவனத்தை வாங்கி இருக்கும் நார்வே நாட்டை சேர்ந்த ஓர்களா (Orkla) நிறுவனம் கூடிய விரைவில் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் எம்டிஆர் மற்றும் ஈஸ்டர்ன் ஆகிய நிறுவனங்கள் ரெடி டூ குக் உணவுகள், ரெடிமேடு உணவுகள், இனிப்பு வகைகள் , மசாலா பொருட்கள், ஊறுகாய் , பானங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களை நார்வேயின் ஓஸ்லோவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஓர்களா நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஓர்களா இந்தியா என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி இரண்டு நிறுவனங்களையும் அதன் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஓர்களா இந்தியா நிறுவனம் கூடிய விரைவில் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்காக ஐபிஓ வெளியீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த ஐபிஓ மூலம் திரட்டுவதற்கு இந்த நிறுவனம் முடிவு செய்து இருக்கிறதாம். அடுத்த காலாண்டிலேயே நிறுவனம் இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்யக்கூடும் என மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக பல்வேறு வங்கிகளிடமும் முகமைகளிடமும் இந்த நிறுவனம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது, கூடிய விரைவில் எப்போது இந்த ஐபிஓ வெளியீடு செய்யப்படுகிறது, எவ்வளவு நிதி திரட்டப்படுகிறது, ஒரு பங்கின் மதிப்பு எவ்வளவு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியாகும். அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த நிறுவனத்தின் ஐபிஓ இந்திய பங்குச் சந்தையில் வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தையில் தங்களுடைய நிறுவனங்களை பட்டியலிடுவதற்காக தற்போது போட்டி போட்டுக்கொண்டு ஐபிஓ வெளியீடு செய்கின்றன.
அக்டோபர் மாதத்தில் தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய இந்திய தொழிலுக்காக முதன்முறையாக ஐபிஓ வெளியீடு செய்தது 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நடப்பு ஆண்டிலேயே வெளியிடப்பட்ட மிகப்பெரிய ஒரு ஐபிஓவாக இது கருதப்பட்டது. அதேபோல கூடிய விரைவில் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இந்திய பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, பங்குச்சந்தையின் மதிப்பீடு, பெரும்பாலானவர்கள் பங்குச்சந்தையை நோக்கி முதலீடுகளை வைப்பது ஆகியவை காரணமாக இந்திய பங்குச்சந்தையின் பக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளது.


Click it and Unblock the Notifications