இந்தியாவில் கொரோனா பாதிப்புக் காரணமாக ஹாஸ்பிடாலிட்டி துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பல முன்னணி ரெஸ்டாரன்ட்களும், ஹோட்டல்களும் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் அதிக அளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட OYO நிறுவனம் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக நிறுவனத்தில் செய்யப்பட்ட மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தில் இருந்து சுமார் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

OYO நிறுவனம்
இந்தியா ஹோட்டல் வர்த்தகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கும் OYO நிறுவனம் இந்தக் கொரோனா காலத்தில் அதிகளவிலான வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
மக்கள் கொரோனா தொற்றுக் காரணமாக வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் வெளியூர்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹோட்டல் புக்கிங் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

300 ஊழியர்கள் பணிநீக்கம்
OYO நிறுவனத்தில் 300 ஊழியர்கள் பணிநீக்கம் அறிவிப்புக்குப் பின், இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், நிறுவனத்தில் பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை, சில குறிப்பிட்ட வர்த்தக வடிவத்தில்
அடிப்படை மாற்றங்களைச் செய்து வர்த்தகத்தை மேம்படுத்தும் முயற்சிகளைச் செய்து வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும் , கூட்டணிகளுக்கும் சிறப்பான சேவை அளிக்கும் பணியைத் தொடர முடியும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் பணிநீக்கம்
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மற்றும் பயணங்களுக்கான தடை ஆகியவை ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டிராவல் துறையைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் கட்டுப்படுத்துவது முக்கியமானதாக மாறியுள்ளது.

ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டிராவல் துறை
தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறைந்தாலும் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டிராவல் துறையில் வர்த்தகத்தின் அளவு பெரிய அளவில் உயரவில்லை. குறிப்பாக இந்தியா போன்று அதிகப் பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட நாடுகளில் ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டிராவல் துறையில் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

2020 வருவாய் சரிவு
கடந்த 2 வருடங்களாக OYO நிறுவனத்தின் வருவாய் அதிகளவிலான நஷ்டத்தை அடைந்து வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் வர்த்தகத்தின் அளவும் பெரிய அளவில் சரிந்த காரணத்திற்காக இந்நிறுவன வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவலகம் மூடல்
OYO நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கப் பல அலுவலகங்களை நிரந்தரமாக மூடிவிட்டு ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From home கொடுத்த நிகழ்வு லாக்டவுன் காலத்தில் நடந்தது.