பிரிட்டனின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) பி.பி. பாலாஜியை நியமித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் தற்போதைய தலைமை நிதி அதிகாரி பி.பி. பாலாஜி, லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய சி.இ.ஓ.-வாக நவம்பர் மாதத்தில் பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய CEO ஆட்ரியன் மார்டல் கடந்த 32 ஆண்டுகளாக JLR நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதில் கடந்த 3 ஆண்டுகளாக நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். ஆட்ரியன் மார்டல் விரைவில் ஓய்வு பெற உள்ளதால், பி.பி. பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்களின் தலைவர் என். சந்திரசேகரன் தற்போதைய CEO ஆட்ரியன் மார்டலுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், புதிய CEO பி.பி. பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பி.பி.பாலாஜி, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை நன்கு அறிந்தவர். அவரது தலைமையில், JLR-ன் புதிய பயணத்தை வேகமாக முன்னெடுக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனத்தின் தற்போதைய தலைமை அதிகாரி ஆட்ரியன் மார்டல் தலைமையில், கடந்த மூன்று ஆண்டுகளில் JLR தனது "Reimagine" என்ற நீண்டகாலத் திட்டத்தில் முக்கிய முன்னேற்றங்களை கண்டது. இத்திட்டத்தின் மூலம் நிறுவனத்தின் மைய நோக்கமாக மின் வாகனங்களுக்கு மாறுதல், வளர்ச்சி மற்றும் அதன் பிரீமியம் பிராண்டுகளின் தர உயர்வு ஆகியவை அமைந்துள்ளன.
இந்த 3 ஆண்டுகள் எனக்கு மிகப்பெரிய பெருமை. JLR ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இந்த மாற்றத்தின் காலப்பகுதியில், நாங்கள் நிறுவனத்தின் நிலையை பலப்படுத்தியுள்ளோம். பி.பி. பாலாஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று மார்டல் கூறியுள்ளார்.
தற்போது புதிய CEO ஆக நியமிக்கப்பட்டுள்ள பி.பி. பாலாஜி, சென்னை ஐஐடி மற்றும் IIM கொல்கத்தா-வில் கல்வி பயின்றவர். அவருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உலகளாவிய அனுபவம் உள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் மற்றும் வாடிக்கையாளர் பொருட்கள் (FMCG) துறைகளில் அனுபவம் உள்ளது. சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.
இதுகுறித்து பிபி. பாலாஜி பேசுகையில், "இந்தச் சிறந்த நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெருமையான ஒன்று. கடந்த 8 ஆண்டுகளில் JLR மற்றும் அதன் புகழ்பெற்ற உலகளாவிய பிராண்டுகள் மீது எனக்கு அதிக நெருக்கம் உருவானது. JLR-ஐ மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் நானும் என் குழுவும் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications