பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் வாழ்வா சாவா போராட்டத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் எப்படியாவது திவாலாவதில் இருந்து தப்பிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசு கடுமையாக முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் அரசுக்கு சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகளவிலான உதவி செய்தாலும் இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் அளவுக்கு இல்லை என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் கடன் அளவுகள் குறித்து முக்கியமான ரிப்போர்ட் வெளியாகியுள்ளது, ஏற்கனவே ஐஎம்எப் அமைப்பின் கடன் திட்டம் ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் அதற்குள் எப்படியாவது இந்த 6.7 பில்லியன் டாலர் கடனை பெற வேண்டும் என எக்ஸ்டர்னல் பண்டிங் கேப் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து வருகிறது.

பாகிஸ்தான் அரசின் மொத்த கடன் அளவு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 34.1 சதவீதம் அதிகரித்து 58.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் ரூபாய் என்பது பாகிஸ்தான் ரூபாய், டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் மோசமான நிலைக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இன்று 285.47 ரூபாயாக உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவல் அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டின் கடன் அளவு ஏப்ரல் மாத முடிவில் வருடாந்திர அடிப்படையில் 34.1 சதவீதமாகவும், மாதாந்திர அடிப்படையில் 2.6 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதில் உள்நாட்டு கடனான 36.5 லட்சம் கோடி ரூபாயும், வெளிநாட்டு கடனாக 22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டு கடன் அளவு சுமார் 49.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு கடனில் பெரும் பகுதி அரசு பத்திரங்களில் வாங்கப்பட்ட கடனாக உள்ளது. இப்பிரிவு கடன் மட்டுமே 25 லட்சம் கோடி ரூபாய். இதற்கு மத்தியில் பாகிஸ்தான் நாடு அரசியல் பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகள், நாணய மதிப்பில் சரிவு, தொடர்ந்து சரிந்து வரும் அன்னிய நாணய இருப்பு என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இது ஒருபக்கம் இருக்க பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் ஏப்ரல் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 36.4 சதவீதமாக உயர்ந்தது, பணவீக்கத்தின் அதிகப்படியான உயர்வுக்கு முக்கியமான காரணம் பாகிஸ்தான் நாட்டின் உணவு பொருட்களின் விலை உயர்வு தான். தெற்காசியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது, மார்ச் மாதம் 35.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications