கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் அரசு அடுத்த நான்காண்டுகளுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. இது அந்நாட்டு அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசின் தற்போதைய வெளிநாட்டு கரன்சி கையிருப்பு 9.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள், ஆனால் அந்நாடு அடுத்த நான்கு ஆண்டுகளில் திரும்ப செலுத்த வேண்டிய கடன் இதனை விட 10 மடங்கு அதிகமாகும்.
இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் பாகிஸ்தான் அரசு 2024 முதல் 2027 ஆம் ஆண்டுக்குள் வெளியிடங்களில் வாங்கிய 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை திரும்ப செலுத்தி ஆக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற நிலைக் குழுவில் பேசிய அந்நாட்டு நிதித்துறை இணை அமைச்சரான அலி மாலிக்கும் இந்த தகவலை வெளியிட்டு இருந்தார். இருப்பினும் இந்த பழைய கடன்களை தீர்ப்பதற்கு புதிதாக கடன் வாங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்கான எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை என தெரிவித்துள்ள மாலிக் கடன் வழங்கிய அமைப்புகளிடம் கடன் செலுத்தும் காலத்தை தள்ளி போடுவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இந்த சூழலில் சர்வதேச நாணய நிதியத்தின் வாரியம் பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 37 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்திற்கு வரும் 25ஆம் தேதி ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருந்தாலும் இந்த 7 மில்லியன் டாலர் நிதி உதவி போதுமானதாக இருக்காது என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி தான் அந்நாட்டில் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்வதற்கும் காரணமாக அமைந்தது. இந்த சூழலில் பாகிஸ்தான் அரசு நட்பு நாடுகள் மற்றும் பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் கடன் பெற்று பொருளாதார நெருக்கடியை சமாளித்து வருகிறது.
பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் மக்களில் கோடிக்கணக்கானவர்கள் தற்போது வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து இருக்கிறது, வேலை வாய்ப்பு கிடைக்காமல் பாகிஸ்தான் இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமும், நட்பு நாடுகளிடமும் கடன் வாங்கி வருகிறது . ஆனால் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த வேண்டிய காலமும் நெருங்கி விட்டதால் பாகிஸ்தான் அரசு தற்போது பெரிய அளவிலான நிதி சிக்கலை எதிர் கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி அமைப்புகளை தாண்டி சவுதி அரேபியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் கடன் உதவி வழங்கியுள்ளன.
Written by: Devika


Click it and Unblock the Notifications