ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு அருகில், பைசரன் புல்வெளியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் பல ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியா - பாகிஸ்தான் மத்தியில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பைசரன் புல்வெளி இயற்கை அழகு மிக்க இந்த பகுதி என்பதால் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான மக்கள் இங்கு வருவது வழக்கம். இதை டார்கெட் செய்து தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னணி அமைப்பாகக் கருதப்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) தாக்குதலை நடத்தியது மூலம் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த இந்திய அரசு நேற்று சிந்து நதி நீர் ஒப்பந்தம், விசா தடை, 48 மணிநேரத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதேவேளையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்றைச் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) அனைத்து படைகளையும் தயார் நிலையில் இருக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

CCS அமைப்பின் இந்த உத்தரவு பாகிஸ்தான் அரசையும், பாகிஸ்தான் ராணுவத்தையும் பீதி அடைய செய்துள்ளதாகக் கருத்து நிலவுகிறது. பாகிஸ்தான், கராச்சி கடற்கரையில் இருந்து ஏப்ரல் 24 முதல் 25 வரை, தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone) சர்பேஸ் டூ - சர்பேஸ் ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக ANI தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு அடுத்த 15 மணிநேரத்தில் வெளியாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் அரேபியக் கடற் பகுதியை no-fly zone எனவும் அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. மேலும் இந்த ஏவுகணை சோதனையை இந்தியாவுடன் போர் செய்யத் தயார் என்பதைக் காட்டும் விதமாகவும் பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் சோதனை செய்யும் இந்த ஏவுகணை 480 கிலோமீட்டர் வரையில் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது என இந்தியா டூடே தனது செய்தியில் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் இந்த அவசர சோதனை செய்ய முக்கிய காரணம், இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்ற அச்சத்தால் எடுக்கப்பட்டு உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்பு பாகிஸ்தான் அரசு தனது விமானப் படையை அலர்ட் மோடில் வைத்துள்ளது. இதேபோல் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் AWACS விமானம் சுற்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
480 கிலோமீட்டர் வரையில் சென்று தாக்குதல் பறந்து சென்று தாக்கும் ஏவுகணையைப் பாகிஸ்தான் அவசர அவசரமாகச் சோதனை செய்ய 2 காரணம் மட்டுமே. 1. இந்தியாவுடன் போரை எதிர்கொள்ளத் தயார் என்பதைக் காட்டவே. ஆனால் பாகிஸ்தான் பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலைமையில் இந்த போரை எதிர்கொள்ளுமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது. 2. இந்தியா தாக்கிவிடுமோ என்ற பதற்றத்திலும், இந்தியாவை விட ஆயுத பலத்தில் நாம் உயர்ந்தவர்கள் என்ற பிம்பத்தைக் காட்ட இந்த சோதனை செய்யப்படலாம்.
பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை அறிவிப்பு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகளை உஷார் படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன. பாகிஸ்தான் பங்குச் சந்தை (PSX) ஏற்கனவே கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த ஏவுகணை சோதனை அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications