பாகிஸ்தான் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் வேளையில் அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூட முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திற்கும் பெரும் ஆபத்து வந்துள்ளது.
எந்தொரு நாடாக இருந்தாலும் சரி அதிகப்படியான வேலைவாய்ப்பு உருவாக்கும் ஒரு துறைகளில் ஒன்று ஆட்டோமொபைல். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து இரண்டாவது மாதமாகப் பயணிகள் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், பாகிஸ்தானின் வாகன உற்பத்தித் துறை பெரும் சவால்களை எதிர்கொள்கிறது.

நவம்பர் மாதம் ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் வெறும் 4,875 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட 15,432 கார்கள் எண்ணிக்கை ஒப்பிடுகையில் 68% சரிவாகும். பாகிஸ்தான் வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (PAMA) நவம்பர் மாதம் விற்பனை தரவுகளை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் வாகன உற்பத்தியில் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், பணவீக்கம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாகக் கார்களின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல் அந்நாட்டின் நாணய மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டும், உள்நாட்டில் விற்கப்படும் கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது.
இதனால் கார் வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டும் 3.6 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 500 கார்கள் வீதம் விற்பனையாகும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பல வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே உதிரிப்பாகங்கள் இறக்குமதியில் இருக்கும் பிரச்சனை காரணமாகத் தங்களது உற்பத்தியை நிறுத்திய நிலையில், மீதமுள்ள நிறுவனங்களும் தற்போதைய மோசமான விற்பனை காரணமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
மாதம் 5000 கார்களுக்கும் குறைவான விற்பனை நடக்கும் ஒரு நாட்டில் எதற்காக உற்பத்தி தொழிற்சாலை வைத்துக் கார்களைத் தயாரிக்க வேண்டும் என எந்தொரு நிறுவனமும் யோசிக்கும், இதனால் பாகிஸ்தானில் இருந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications