இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில், பல மாத போராட்டங்களுக்குப் பின்பு ஐஎம்எப் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில் தற்போது பிற கடன் வழிகளை ஆராய்ந்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் சீனாவிடம் மீண்டும் கையேந்த வேண்டிய நிலை பாகிஸ்தான் அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் போக்கச் சீனாவிலிருந்து ஏற்கனவே வாங்கிய கடன்களைத் தாண்டி கூடுதல் 10 பில்லியன் யுவான் (1.4 பில்லியன் டாலர்) கடனுக்கான கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாடு ஏற்கனவே சீனாவிடம் 30 பில்லியன் யுவான் (4.3 பில்லியன் அமெரிக்க டாலர்) சீன நாணய மாற்று (currency swap agreement) வசதியை முழுமையாகப் பயன்படுத்தி கடன் வாங்கியுள்ளது.

பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அரங்கசேப், வாஷிங்டனில் நடைபெற்ற IMF மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களுக்கு மத்தியில், சீனாவின் துணை நிதி அமைச்சர் லியோ மினுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கையை விடுத்தார்.
சீனா அரசு, பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்று கடன் கொடுத்தால் சீனா உடனான கடன் மதிப்பு மட்டும் சுமார் 5.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும்.
பாகிஸ்தான் அரசு, சீனாவிடம் இதற்கு முன்பே தனது கடன் வரம்பை (currency swap agreement) அதிகரிக்கப் பலமுறை கோரிக்கை விடுத்தாலும், சீனா அனைத்து கோரிக்கைகளையும் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது. ஆனால் தற்போது ஐஎம்எப் கடன் கொடுத்த பின்பு பாகிஸ்தான் அரசு மீண்டும் தனது நட்பு நாடுகளின் கதவைத் தட்டத் துவங்கியுள்ளது.
சீன அரசு சமீபத்தில் தான் 30 பில்லியன் யுவான் கடன் வசதியைக் கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்தது, இதற்கிடையில் புதிய கடன் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. சீன பிரதமர் லி கியாங்கின் பாகிஸ்தான் வந்த போது currency swap ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டது.
பாகிஸ்தான் அரசு நிதி தேவைக்காக மீண்டும் சீனாவின் கதவைத் தட்டியுள்ளது பாகிஸ்தானின் கடுமையான பொருளாதார சவால்கள் மற்றும் அதன் நிதி நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.
இதேவேளையில் சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள முக்கியமான மீன் பாகிஸ்தான் என்பதையும் மறுக்க முடியாது. சீனாவின் கடன் வலையில் மாட்டிக்கொண்டுள்ள பல நாடுகள் திவாலாகி பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் கடன் கேட்டுள்ளது.


Click it and Unblock the Notifications