மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில் அதன் தாக்கம் தற்போது ஒவ்வொரு நாடுகளின் நிதி நிலையிலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே மோசமான பொருளாதாரத்தை எதிர்கொண்டு இருக்கும் பாகிஸ்தானில் மோசமாக எதிரொலிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே எரிபொருள் பயன்பாட்டை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கும் வேளையில் நிதி நெருக்கடியை சமாளிக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தான் உடன் போர் தாக்குதலை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது கையில் எடுத்துள்ள நிதி நிலை மேம்பாட்டு மற்றும் செலவினம் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் 5% முதல் 30% வரை குறைப்பை அமல்படுத்த பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif ஒப்புதல் அளித்துள்ளார்.
பொருளாதார அழுத்தம்
பாகிஸ்தான் அரசு வெளியிட்ட தகவலின்படி, எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் பொருளாதார தாக்கம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் தலைமையில் உயர் நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் பல்வேறு சிக்கன மற்றும் செலவு குறைப்பு திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
இந்த ஆலோசனையின் முடிவில், அரசு ஊழியர்களுக்கு முன்பே அமல்படுத்தப்பட்ட சம்பளக் குறைப்பை போலவே, அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட அமைப்புகளின் பணியாளர்களுக்கும் அதே மாதிரியான 5% முதல் 30% வரை சம்பளக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த சிக்கன நடவடிக்கைகள் மூலம் சேமிக்கப்படும் நிதி முழுவதும் பொதுமக்கள் நலத்திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதோடு, பொதுமக்களுக்கு உதவும் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.
சம்பளக் குறைப்புடன் சேர்த்து அரசு செலவுகளை குறைக்கும் மற்ற முக்கிய நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 50% வரை குறைக்க மூன்றாம் தரப்பு ஆய்வு அமைப்பு கண்காணிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் அரசு பயன்படுத்தும் வாகனங்களில் சுமார் 60% வரை இயங்காமல் நிறுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications