இஸ்லாமாபாத்: ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது ஒரு நாட்டின் மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. பதக்க பட்டியலில் நமது நாடு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய அந்த நாட்டு மக்கள் அத்தனை ஆவலாக காத்திருப்பார்கள். இவ்வாறு நாட்டிற்காக விளையாடி பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டு அரசுகள் சார்பில் பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்படும். குறிப்பாக தங்கப் பதக்கம் வென்று இருந்தால் அவர்களுக்கு தனி மரியாதையே வழங்கப்படும்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்றுள்ளது. குறிப்பாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஹர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ராவும் கலந்து கொண்டார்.

இவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீரஜ் சோப்ராவை பின்னுக்கு தள்ளி ஹர்ஷத் நதீம் என்ற 26 வயதான பாகிஸ்தான் இளைஞர் தங்கப்பதக்கத்தை வென்றார்.
மொத்த பாகிஸ்தான் மக்களும் ஹர்ஷத் நதீமை கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு அமைப்புகள் , விஐபிகள் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு என பல வழிகளில் ஹர்ஷத் நதீமுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் தொழிலதிபர் ஒருவர் சுசுகி ஆல்டோ காரை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த ஷெக்கனி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அலி ஷெக்கனி.
இவர் மாருதி சுசுகி ஆல்டோ காரை பரிசாக வழங்குவதாக அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியது என்றாலும் சமூக வலைத்தளங்களில் இது பெரிய கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவை சேர்ந்த சமூக வலைத்தளவாசிகள் கடுமையாக சாடி வருகின்றனர். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஒருவருக்கு இந்த காரையா பரிசாக வழங்கப் போகிறீர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் ஆல்டோ காரின் விலை சுமார் 5 லட்சம் ரூபாய் , ஆனால் பாகிஸ்தானில் இதன் விலை 23 லட்சமாக உள்ளது. எனவே பாகிஸ்தானை சேர்ந்த மக்களுக்கு ஆல்டோ கார் வாங்குவது என்பது கனவு என சொல்லப்படுகிறது. இருந்தாலும் தங்கம் வென்ற நபருக்கு ஒரு பெரிய நிறுவனம் சார்பில் ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கி இருக்கலாமே என பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications