காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த நிலையில் பாகிஸ்தானில் பாயக்கூடிய செனாப் நதி வறண்டு இருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காஷ்மீரில் சுற்றுலா பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த தாக்குதலால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு முறிந்துள்ளது. மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதால் பாகிஸ்தானின் முக்கிய நதிகளில் ஒன்றான செனாப் நதி முற்றிலும் வற்றிப் போயுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் சில செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மிக முக்கியமான நதி நீர் ஒப்பந்தம் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம். கிட்டதட்ட 60 ஆண்டு காலமாக செயல்பாட்டில் இருக்கும் ஒப்பந்தத்தை நிறுத்தியதன் பாதிப்பை பாகிஸ்தான் சந்திக்க தொடங்கிவிட்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் படி பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாடு இந்தியாவிடம் இருக்கிறது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாடு பாகிஸ்தானிடம் இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைக்கிறது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைக்கிறது.
தற்போது இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ,செனாப் ஆறு வற்றிப் போயுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 26ம் தேதி இந்த நதியில் தண்ணீர் ஓடுவதையும், ஏப்ரல் 29ம் தேதி தண்ணீர் இன்றி வற்றி காணப்படுவதும் செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் பாயும் செனாப் நதி முற்றிலுமாக வற்றி நீர் இன்றி காணப்படுவது இந்த செயற்கை கோள் படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அசாம் மாநில அமைச்சர் அசோக் சிங்கால் இந்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, பாகிஸ்தான் தன் கண்ணீரை கொண்டு இந்த நதியை நிரப்பி கொள்ளட்டும் என கூறியுள்ளார்.செனாப் நதி வற்றி போயிருப்பது பாகிஸ்தானில் பெரிய அளவில் வேளாண் உற்பத்தியை பாதிக்கும். இது நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் தாக்கும்.


Click it and Unblock the Notifications