இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அங்கு தொழில் வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான், தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, பாகிஸ்தானின் கடன், இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று (ஜூன் 09) வெளியிடப்பட்ட பாகிஸ்தானின் பொருளாதார ஆய்வறிக்கையில், "பாகிஸ்தானின் கடன், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான், எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, பாகிஸ்தான் நாட்டின் மொத்த பொதுக்கடன் மார்ச் 2025-க்குள் பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 76,007 பில்லியனை எட்டியுள்ளது. (இந்திய ரூபாயில் ரூ.23.1 டிரில்லியன் மற்றும் 269.344 அமெரிக்க டாலர்கள்). இது நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
பாகிஸ்தானின் இந்தப் பொதுக்கடன் கடந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2020 - 21ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பொதுக்கடன் ரூ.39,860 பில்லியனாக இருந்தது. அதேபோல், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.17,380 பில்லியனாக இருந்தது. ஆனால், தற்போது கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது. 76,007 பில்லியன் தொகையில் 51,518 பில்லியன் உள்நாட்டுக் கடனும் ரூ.24,489 பில்லியன் வெளிநாட்டுக் கடனும் அடங்கும்.
இந்த அதிகப்படியான கடன், வட்டி ஆகியவை எதிர்காலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். மேலும், தொடர்ந்து இதை கவனிக்காவிட்டால், நீண்டகால நிதி நிலைத்தன்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியா அதிக எண்ணிக்கையிலான மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளதாகவும், ஆனால், பாகிஸ்தான் அதன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பேர் வறுமையில் வாழ்கிறார்கள் என்றும், 16.5 சதவீதம் பேர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள் என்றும் கூறியுள்ளது. அதேசமயம் தற்போது, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால், அந்நாட்டு ராணுவத்தை கட்டமைக்க செலவினங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பாகிஸ்தான் மேலும் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications