அரசாங்கம் தற்போது பான் கார்டு 2.0 திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொருளாதார விவகார குழு வருமானவரித்துறைக்கு பான் கார்டு வழங்கும் செயல்முறையை மேம்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் பான் கார்டு பெறுவதற்கான செயல்முறை இன்னும் காகித முறையிலேயே உள்ளது. இதுவரையில் எந்த விதமான மேம்பாடும் இதில் செய்யப்படவில்லை.
2023-ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு அரசு நிறுவனங்கள் பான் கார்டை பொது வணிக அடையாளமாக மாற்ற முடிவு செய்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப புதிய பான் கார்டு அமைப்பு கொண்டு வரப்படவுள்ளது. இதில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தாலும் தவறான பான் நம்பரை கொடுத்திருந்தாலும் அரசு துறைகள் தெள்ளத் தெளிவாக கண்டறிந்து விடும்.

பான் கார்டைத் தவறாகப் பயன்படுத்துவதும், 2 பான் கார்டு பெறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வரி விதிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, பான் கார்டு 2.0 திட்டத்தின் கீழ் டைனமிக் கியூஆர் குறியீடு போன்ற சிறப்பு பாதுகாப்பு அம்சங்களோடு பான் கார்டு வர இருக்கிறது. இது டூப்ளிகேட் பான் கார்டுகளையும், தவறான தகவல்களையும் தானாகவே கண்டறிந்து விடும் என்று கூறப்படுகிறது.
வருமானவரிச் சட்டம் 1961-இன் பிரிவு 272B-இன் கீழ் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இரண்டு பான் கார்டுகளை வைத்திருக்க அனுமதியில்லை. யாரேனும் டூப்ளிகேட் பான் கார்டை கண்டறிந்தால் அதற்கு 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்த பான் 2.0 திட்டம் ஒருவர் 2 பான் கார்டுகளை பெரும் நிகழ்வுகளை வெகுவாக குறைக்கும் என்று கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் வேறு ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி போலியாக பான் கார்டு அப்ளை செய்து பெறுவது அதிகரித்துவிட்டது. அதோடு சில நிறுவனங்கள் போலியாக பான் கார்டு பெற்று அதை பயன்படுத்தும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மோசடி நிறுவனங்கள் பல டூப்ளிகேட் பான் கார்டுகளை பயன்படுத்தி இதற்கு முன்னர் பிடிபட்டுள்ளனர். அசல் பான் கார்டு வைத்திருப்பவருக்கு இது குறித்த விபரங்கள் தெரியப்படுவதே இல்லை. எனவே உங்கள் பெயரில் ஏதேனும் டூப்ளிகேட் பான் கார்டு வழங்கப்பட்டிருக்கிறதா? என்று கண்டறிந்து அதை செயலிழக்கச் செய்வது அவசியம். ஒருவர் தங்களிடம் இரண்டு பான் கார்டு உள்ளதா என்பதை மதிப்பீட்டு அதிகாரியை அணுகி தெரிந்து கொள்ளலாம் அல்லது இ-ஃபைலிங் போர்டல் மூலம் தெரிந்து கொள்ளலலாம்.
பான் 2.0 திட்டத்தின் கீழ் QR கோடுடன் கூடிய பான் கார்டு அனைத்து வரி செலுத்துவோருக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications