சென்னை: எந்த ஒரு முதலீட்டு திட்டமாக இருந்தாலும் சரி அல்லது வங்கி தொடர்பான விஷயங்களாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் தேவைப்படும் முதன்மை ஆவணங்களாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளது. தற்போது போஸ்ட் ஆபீஸ்களில் முதலீடு செய்பவர்களுக்கு பான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடைய பான் விவரங்களை, வருமான வரித்துறையின் விவரங்களோடு போஸ்ட் ஆபீஸ் சரிபார்த்த பின்னரே, நீங்கள் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்
எக்கனாமிக் டைம்ஸ்-இன் தரவுகளின் படி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டில் பெயர் மற்றும் உங்களுடைய பிறந்த தேதி சரியானதாக இருக்க வேண்டும். மேலும், அவற்றில் ஏதேனும் பிழை இருப்பின், உங்களால் எந்தவித போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய முடியாது எனக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 3ஆம் தேதி, 2023 ஆம் ஆண்டு நிதி அமைச்சகம், அரசு சேமிப்பு விதிகளின்படி(2023), ஒவ்வொரு தனிநபரும் சில ஆவணங்களை, சிறு சேமிப்புத் திட்டங்களில், கணக்கைத் தொடங்குவதற்கு முன் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது. அதில் ஆதார் கார்டும் ஒன்று. ஆதார் கார்டு தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் இந்தத் திட்டங்களில் சேமிக்க விரும்புவோர்களிடம், ஆதார் கார்டு இல்லை என்றால், அவர்கள் ஆதார் கார்டை பெற்ற பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் சிறு சேமிப்புத் திட்டங்களின் கணக்கைத் திறக்க அந்த ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பான் மற்றும் ஆதார் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
எக்கனாமிக் டைம்ஸ்-இன் தரவுகளின் படி பான் விவரங்களைச் சரி பார்ப்பதற்காக CBS என்ற சிஸ்டம், புரோடீன் e-Gov டெக்னாலஜிஸ் (முன்னர் NSDL) உடன் இண்டகிரேட் செய்யப்பட்டுள்ளது. CBS பான் விவரங்களை NSDL போர்ட்டலில் இருந்த பெற்ற விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியானதா என்பதை கண்டுபிடிக்கும். இனிமேல் PPF, NSC மற்றும் பிற திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது பான், ஆதார் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 7, 2024 ஆம் ஆண்டு வந்த தபால்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி பான் சரிபார்ப்பிற்காக ப்ரோடீன் அமைப்பு மே 1ஆம் தேதி முதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் சிறு சேமிப்பு திட்டங்களில் விண்ணப்பிப்பதற்கு பான் கார்டு அவசியம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல பின்வரும் ஏதேனும் ஒன்று நடந்திருந்தால், முதலீட்டாளர்கள் கட்டாயம் பான் கார்டைச் சமர்ப்பிக்க வேண்டும்.
1. முதலில் அவர்களுடைய கணக்கில் இருப்பு தொகை ரூ. 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் பான் கார்டு அவசியமாகிறது.
2. ஒரு நிதி ஆண்டில் வாடிக்கையாளர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1 லட்சத்திற்கும் மேல் இருந்தாலும் பான் கார்டு கட்டாயம்.
3. ஒரு மாதத்திற்குள் மொத்தமாக எடுத்தத் தொகை ரூ. 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், பான் விவரங்கள் தேவை.


Click it and Unblock the Notifications