பான் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கும், திருத்தம் செய்பவர்களுக்கும் வருமான வரித்துறை ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது ஆதார் என்பது அடையாளச் சான்று தானே தவிர, அது பிறந்த தேதிக்கான அத்தாட்சி கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ன் புதிய விதிமுறைகளின்படி, நீங்கள் பான் கார்டு பெற வேண்டுமென்றால் ஆதாரை தவிர வேறு என்னென்ன ஆவணங்கள் கைவசம் இருக்க வேண்டும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
ஆதார் வழங்க தொடங்கிய காலத்திலிருந்து, அது ஒரு அடையாளச் சான்று (Identity Proof) மற்றும் முகவரிச் சான்று (Address Proof) மட்டுமே தவிர, பிறந்த தேதிக்கான சான்று அல்ல என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வருமான வரித்துறை மற்றும் UIDAI ஆகியவை இணைந்து இந்த விதியை இன்னும் கடுமையாக்கியுள்ளன. ஆதாரில் உள்ள பிறந்த தேதி பல நேரங்களில் தோராயமாக பதிவு செய்யப்படுவதால், நிதி சார்ந்த ஆவணமான பான் கார்டுக்கு அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆதார் கார்டை நீங்கள் பான் கார்டுக்கு பயன்படுத்தவே முடியாது என்று அர்த்தமல்ல. உங்களுடைய பெயரை உறுதிப்படுத்தவும், முகவரியை உறுதிப்படுத்தவும் உதவும். ஆனால் பிறந்த தேதி (DOB) என்று வரும்போது மட்டும், ஆதார் அல்லாத வேறு ஒரு ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆக நீங்கள் பான் கார்டு விண்ணப்பிக்கும் போது பிறந்த தேதிக்காக, பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு ஊழியராக இருந்தால் பணி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து கொள்ளலாம்.
ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தின் படி, பான் கார்டில் உள்ள விவரங்களும் ஆதாரில் உள்ள விவரங்களும் (பெயர், பாலினம் போன்றவை) சரியாக பொருந்த வேண்டும். ஆனால் பிறந்த தேதியை உறுதிப்படுத்த மட்டும் மேலே சொன்ன மாற்று ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும்.ஆக இனி பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ போனால் கட்டாயம் மேற்கண்ட மாற்று ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications