சென்னை: இந்தியாவில் வீட்டு உபயோக மின்னணு சாதன சந்தை என்பது மிகப்பெரியது. ஜப்பானை சேர்ந்த பேனசோனிக் நிறுவனம் இந்தியாவில் கன்சியூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பேனசோனிக் நிறுவனத்தின் விற்பனை சரிவடைந்து வருகிறது.
குறிப்பாக குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின்கள் விற்பனை பெருமளவில் குறைந்து வருகிறது. ஒட்டுமொத்தமாகவே இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய இருப்பை தக்க வைக்க முடியாமல் தவித்து வருகிறது. இத்தகைய சூழலில் இந்திய சந்தையில் பேனசோனிக் நிறுவனம் தன்னுடைய பொருட்கள் விற்பனையை படிப்படியாக குறைக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக பேனசோனிக் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் விற்பனையை நிறுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பேனசோனிக் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் ஜஜார் ஆலையில் பேனசோனிக் நிறுவனம் குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. தங்களுடைய நிறுவனம் இந்திய சந்தையில் குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் விற்பனை போட்டியில் இருந்து வெளியேறுவதாக கூறி இருக்கும் பேனசோனிக் நிறுவனம்,வீட்டுக்கு தேவையான தானியங்கி கருவிகள், வென்டிலேஷன் மற்றும் ஏசி உள்ளிட்ட சாதனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளது.
இது தவிர பல்வேறு நிறுவனங்களுக்கு தேவையான மின்சாதன மற்றும் எரிசக்தி சார்ந்த பொருட்களை வழங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கிறது. இதன் காரணமாக கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் தொழிலில் இருந்து படிப்படியாக வெளியேறி வருவதாகவும் தங்களின் தொழிலையே மறுகட்டமைப்பு செய்வதாகவும் அறிவித்துள்ளது. தங்கள் நிறுவனம் குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் விற்பனையை நிறுத்தினாலும் தொடர்ந்து இவற்றை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சர்வீஸ் மற்றும் வாரண்டி கவரேஜ் உள்ளிட்டவை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
மேலும் இந்தியாவில் தங்களுடைய தொழிலை குறைத்து வருவதன் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையிலும் ஈடுபடபோவதாகவும் பேனசோனிக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. பேனசோனிக் குளிர்சாதன பெட்டி மற்றும் வாஷிங் மெஷின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்திருப்பதை அடுத்து வேர்ல்பூல், வோல்டாஸ் ஆகிய போட்டி நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் உயர்வை கண்டன.
ஜூன் 26ம் தேதி அன்று வேர்ல்பூல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் உயர்ந்த 1455 ரூபாய் என்ற அளவிலும் வோல்டாஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இரண்டு சதவீதம் அதிகரித்து 1341 ரூபாய் என்று அளவிலும் வர்த்தகமானது. பேனசோனிக் சந்தையில் இருந்து வெளியேறுவது இந்நிறுவனங்களின் விற்பனையை அதிகரிக்க செய்யும் என்ற எதிர்பார்ப்பே பங்குகளின் மதிப்பு உயர காரணம்.


Click it and Unblock the Notifications