தமிழ்நாடு அரசு நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்கை வைத்து வேகமாகப் பயணித்து வருகிறது. இதற்காக ஸ்டாலின் அரசு பல துறையில் பல முதலீடுகளை ஈர்த்தாலும் இதை நீண்ட கால வளர்ச்சிப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை.
இதைக் கருத்தில் கொண்டு தான் தலைநகர் சென்னைக்கு அருகே உள்ள பரந்தூரில் 32,704.92 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கப்படுவதுள்ளதாக 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போது, இப்பகுதியில் விமான நிலையம் அமைப்பதில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த பிரச்சனைகளைத் தாண்டி, விமான பயணிகளுக்குப் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் என்றும் பலரும் கூறினர்.
ஏனெனில், பரந்தூர் விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மேலும் இந்த இடம் தற்போதுள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கட்டமைப்பில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டால் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் சந்திக்கும் அதே பிரச்சனையைத் தான் பரந்தூர் விமான நிலையமும் சந்திக்கும்.
இந்த பிரச்சனையைச் சமாளிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, பரந்தூரில் அமையவுள்ள இரண்டாவது விமான நிலையத்துடன் இணைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முக்கியமான திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை (Project Report) தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்தூர் விமான நிலையத்தை பல்வேறு வழித்தடத்தில் இணைக்கும் திட்டத்தையும் தற்போது தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கான மெட்ரோ இணைப்பிற்கான விரிவான திட்ட அறிக்கையில் ஏற்கனவே பூந்தமல்லி-ஐ பரந்தூருடன் இணைக்கும் திட்டம் இருந்தது.
ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு இந்த ஒரு வழித்தடம் மட்டும் போதாது என முடிவு செய்து சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையத்திலிருந்து பரந்தூர் வரை அல்லது கோயம்பேட்டிலிருந்து பரந்தூர் வரை ஒரு பாதையை அமைக்க முடியுமா என்பதையும் ஆலோசித்து வருகிறது.
பரந்தூர் விமான நிலையத்தின் மெட்ரோ திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை தற்போது கன்சல்டென்ட் தயாரித்து வருவதால், இந்த வழித்தடங்களை ஆய்வு செய்து சிறந்த பாதையைப் பரிந்துரைக்கும்படி தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளனர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பரந்தூர் விமான நிலையம் நகரின் முக்கியமான பகுதிகளை மெட்ரோ திட்டம் மூலம் இணைப்பது மட்டும் அல்லாமல் அதிகப்படியான பயணிகளையும், விமானங்களையும் ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications