சென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக 193 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தப்பட வேண்டிய பகுதியில் பல கட்டிடங்கள் உள்ளதாகவும், நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு அதிகமாக இருப்பதால் இத்திட்டம் லாபகரமானதாக இருக்காது என கணக்கிடப்பட்டு இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது என TIDCO அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் தமிழ்நாடு அரசின் கவனம் தற்போது பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் இருப்பதாக TIDCO அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) அதிகாரி ஒருவர் அளித்த தகவல்படி, சென்னையின் இரண்டாவது விமான நிலையமான, பரந்தூர் விமான நிலையம் சுமார் 20,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்பீட்டில் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. அடுத்த வருட இறுதிக்குள் இந்த திட்டத்திற்கான டெண்டர்கள் விடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன, இது முடிவடைய சுமார் ஒரு வருடம் ஆகும் என்றும் விபரம் தெரிந்த அதிகாரிகள் கூறினார். நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்பு டெண்டர்கள் கோரப்படும்.
இந்த மாபெரும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு 13 கிராமங்களில் இருந்து சுமார் 4,563.56 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், 3,246.38 ஏக்கர் பட்டா நிலங்கள் (நஞ்சை நிலம் 2,447 ஏக்கர், புஞ்சை நிலம் 799 ஏக்கர்) மற்றும் 1,317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களும் அடங்கும்.
மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் காரணத்தால் பல நடத்தை விதிமுறைகள் தற்போது நடைமுறையில் உள்ளது, இது தளர்த்தப்பட்ட பிறகு, புதிய பசுமைப்புற விமான நிலையத்திற்கான (Greenfield Airport) இட அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மாநிலத்தால் ஏழு உறுப்பினர்கள் கொண்ட உயரதிகார குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பலமுறை பார்வையிட்டு, அப்பகுதியின் நிலத்தடி நீர் மற்றும் வெள்ள அளவுகள் மற்றும் கடந்த சில தசாப்தங்களாக மழைப்பொழிவு வடிவங்களை ஆய்வு செய்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அனுமதிகளையும் பெறுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து தேவையான சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட வேண்டும்.
பழைய விமான நிலையத்தின் எதிர்காலம்: பெங்களூரு அல்லது ஹைதராபாத்தில் நடந்தது போல் அல்லாமல், பழைய விமான நிலையத்தின் இயக்கம் நிறுத்தப்படாது, புதிய விமான நிலையம் பழைய விமான நிலையத்துடன் இணைந்து செயல்படும். இதன் மூலம், சென்னையின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய இரண்டு விமான நிலையங்கள் இணைந்து செயல்படும் என கூறப்படுகிறது.
கவலைகளும் எதிர்ப்புகளும்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே உள்ள 13 கிராமங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்குச் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு விலையை அரசு வழங்குகிறது.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சட்டம், 2013 கீழ் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உடன், 'பொது நலன்' அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இருப்பினும், நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை இழப்பதைக் காரணம் காட்டி, உள்ளூர் மக்கள் இத்திட்டத்திற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications