சென்னை அருகே பரந்தூரில் அமைக்கப்பட இருக்கும் விமான நிலையத்திற்கு அருகிலேயே சரக்கு கிராமம் ஒன்று அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோவின் மேலான் இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய சந்திப் நந்தூரி இந்த தகவலை வழங்கியுள்ளார்.

பரந்தூரில் அமைய இருக்கும் கிரீன் ஃபீல்ட் விமான நிலையத்துக்கு அருகிலேயே சரக்குகளை கையாளும் வகையில் ஒரு சரக்கு கிராமம் ஒன்று அமைக்கப்படும் என்றும் இது நேரடியாக மப்பேடு பகுதியில் அமைய இருக்கும் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்குடன் இணைக்கப்படும் என்றும் சந்திப்பு நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதே போல ஓசூரில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு அருகிலேயே சரக்குகளை கையாளும் வகையில் ஒரு கிராமம் உருவாக்கப்படும் என கூறியுள்ளார். உற்பத்தி துறையினருக்கு தேவையான மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். ஓசூரில் விமான நிலையம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை அதற்கான இடம் ஒதுக்கப்படவில்லை.
இடத்தை கையகப்படுத்தும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என சந்திப் நந்தூரி கூறியுள்ளார்.
மேலும் இந்திய ரயில்வேயுடன் கூட்டாக இணைந்து தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்து காரிடார்கள் மற்றும் அதிவேக ரயில் சேவைகளை கொண்டு வருவதற்கான ஆய்வினை நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எந்த பாதையில் இவை அமைந்தால் அனைவருக்கும் சாதகமானதாக இருக்கும் என்பது குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை- தூத்துக்குடி, கோயம்புத்தூர்- தூத்துக்குடி மற்றும் சென்னை - ஓசூர் ஆகிய பாதைகளில் இந்த சரக்கு போக்குவரத்து காரிடார்களை அமைக்க முடியுமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக சந்திப் நந்தூரி தெரிவித்துள்ளார். சென்னையின் தற்போதைய விமான நிலையமான சென்னை சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து செயல்படும் வகையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
சுமார் 45 ஆயிரம் கோடி செலவில் இந்த விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் இது 2029 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பரந்தூர் பகுதியில் இருக்கும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications