சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் இணைப்புகள் போக்குவரத்தை எளிதாக்கி சாலையில் வாகன நெரிசல்களை குறைக்க உதவுகின்றன. அந்த வகையில் சென்னையில் பல்வேறு கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

புதியதாக பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அண்மையில் தான் மத்திய அரசு விமான நிலையம் கட்டுவதற்கான ஒப்புதலை வழங்கியது. விமான நிலையம் அமைய இருப்பதால் பரந்தூருக்கு சாலை வழி மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்துகளை ஏற்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பரந்தூர் விமான நிலையத்தை இணைக்கும் வகையில், புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கிலோமீட்டர் தொலைவில் மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வரும் 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையிலான வழித்தடத்தை பரந்தூர் வரை 53 கிலோமீட்டர் தொலைவுக்கு நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் சென்னை மெட்ரோ ரயில் கழகம் தமிழக அரசிடம் சமர்பித்தது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்கட்டமாக, பூந்தமல்லி - சுங்கவார்சத்திரம் வரையில் 27.9 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மெட்ரோ ரயில் திட்டம் 8,779 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசின் பங்களிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுங்கவார்சத்திரம் முதல் பரந்தூர் வரை இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்தை ஒட்டி தமிழக அரசு அந்த பகுதிக்கான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை தீவிரமாக அறிவித்து வருகிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த உடன் மெட்ரோ பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications