ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்குவது வாடிக்கை. அப்போது அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும்.
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டத்தொடரில் 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். 17வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடரான இடைக்கால பட்ஜெட் தொடரில், முதல் நாளான வரும் 31ம் தேதியன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார்.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். பிப்ரவரி 9ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் விலை உயர்வுக்கு எதிராக போராடவும், நிலையான பணவீக்க போக்குகளுக்கு தீர்வு காணவும் வரி குறைப்பு போன்ற நிதி நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் அறிமுகப்படுத்தலாம்.
ஏற்றுமதியை மேம்படுத்துவது, மூலோபாய மற்றும் வளர்ந்து வரும் துறைகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவது, நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைப்பது மற்றும் நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகளை பேணுவதன் மூலம் வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி உறுதியான பாதையை பட்டியலிடுவதே இடைக்கால பட்ஜெட்டின் முதன்மை நோக்கங்களாக இருக்கும்.
அதேவேளையில், இடைக்கால பட்ஜெட் ஆனது திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சமரசம் செய்யாமல் வளர்ச்சி ஊக்குவிப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். பணவீக்கம் என்றால் என்ன என்பது குறித்து சாமானிய மக்களுக்கு சரியான புரிதல் இல்லை. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் பரவலான அதிகரிப்பு பணவீக்கத்தை குறிக்கிறது. இது பணத்தின் வாங்கும் சக்தியின் வீழ்ச்சியாகும்.
கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 5.87 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நவம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.55 சதவீதமாக இருந்தது. இருப்பினும் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்துக்கும் சிறிது குறைவாகவே உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பணியாற்றுகிறது. நாட்டில் பண விநியோகம் மற்றும் கடன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ரெப்போ விகிதம் போன்ற முக்கியமான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி மாற்றியமைக்கிறது.


Click it and Unblock the Notifications