இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்பதற்காக தான் ஈபிஎஃப்ஓ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய கோடிக்கணக்கான ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு திட்டமாக பிஎஃப் திட்டம் இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு ஊழியரின் பெயரிலும் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதந்தோறும் அதில் கணிசமான அளவு பணம் வரவு வைக்கப்படும். அந்த ஊழியர் வேலை செய்யும் காலம் வரை பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். அந்த ஊழியர் ஓய்வு பெறும் போது பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தில் கணிசமான தொகை ரொக்கப் பணமாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக வழங்கப்படுகிறது. இதனை தான் EPS 1995 Pension என அழைக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் ஓய்வூதிய தொகை போதுமா என்பதுதான் கேள்வி. இன்றைய விலைவாசியில் ஒரு சிலிண்டர் வாங்கினாலே ஆயிரம் ரூபாய் முடிந்துவிடும். பல ஆண்டு காலமாகவே இந்த குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயில் இருந்து 7,500 அல்லது 10,000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் கூட்டமைப்பு சார்பாக தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
1000 ரூபாய் பணம் தங்களுக்கு போதவில்லை என ஏராளமான ஓய்வூதியதாரர்கள் தொடர்ச்சியாக அரசு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூட இபிஎஸ் பென்சனை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் தான் தொழிலாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2026- 2027 ஆம் ஆண்டுக்கான 15 வது ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது பல ஆண்டு காலமாக மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என அதில் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக பலதரப்பட்ட ஓய்வூதியதாரர்கள் இடமும் பேசியதில் தங்களுக்கு வருமானம் இல்லாத இந்த காலகட்டத்தில் ஓய்வூதிய தொகையை தான் நம்பி இருக்கிறோம் ஆனால் ஆயிரம் ரூபாய் தான் ஓய்வூதியமாக கிடைக்கிறது. அதை வைத்து செலவுகளை மேலாண்மை செய்ய முடியவில்லை என கூறினார்களாம். இந்த ₹1000 பணம் ஓய்வூதியதாரர்களுக்கான அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இல்லை என்கிறார்களாம்.
தற்போது மருத்துவ செலவினங்கள் மற்றும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ளன என்பதால் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூறி இருக்கிறது. இந்த திட்டத்திற்காக அரசு தன்னுடைய நிதி ஒதுக்கீட்டையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்த கோரிக்கையை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் பிஎஃப் திட்டத்தின் கீழ் பென்ஷன் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் பட்சத்தில் இபிஎஃப் அமைப்பு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையையும் உயர்த்தும்.


Click it and Unblock the Notifications