2024-ஆம் ஆண்டில் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த பலர் தங்கள் பொருட்களை மறந்துவிட்டு சென்றுள்ளனர். பயணிகள் விட்டுச் சென்ற பொருட்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 40 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம், 89 லேப்டாப்புகள், 199 மொபைல்கள் மற்றும் 9 தாலிகள் ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களின் உரிமைகோரல் சரிபார்க்கப்பட்ட பின்னர் மத்திய தொழிலாளர் பாதுகாப்பு படை ஊழியர்களால் (CISF) அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பயணிகளின் பேக்கேஜ் ஸ்கேனர் இருக்கும் இடத்தில் பல பயணிகள் தங்கள் பொருட்களை மறந்து விட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை தவிர்த்து 40 கைக்கடிகாரங்கள், 13 ஜோடி கொலுசுகள், மோதிரங்கள், வளையல்கள் போன்ற நகைகளையும் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலர்கள், சவுதி ரியால் மற்றும் தாய் பாட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 24,550 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டெல்லி மெட்ரோ நெட்வொர்க்கில் 59 தற்கொலை முயற்சிகள் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காப்பாற்றப்பட்டனர், 33 பேர் காயமடைந்தனர். பயணிகள் மற்றும் அவர்களின் சாமான்களை பாதுகாப்பு சோதனை செய்தபோது மொத்தம் 75 தோட்டாக்கள் மற்றும் ஏழு துப்பாக்கிகள் சிஐஎஸ்எஃப் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த பொருட்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டதுக்கு அப்பால் தனியாக பயணித்த 262 குழந்தைகளை CISF அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்கள், பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் உள்ளூர் காவல்துறையினர் அல்லது குழந்தை உதவி மைய தன்னார்வலர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதேபோல கடும் மனவேதனையில் காணப்பட்ட 671 பெண் பயணிகளுக்கும் அதிகாரிகள் உதவி செய்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி மெட்ரோ ஒட்டு மொத்தமாக பயணம் செய்யும் பயணிகளை பாதுகாப்பதற்காக 13,000 ஆண் மற்றும் பெண் பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. டெல்லி மற்றும் அதன் அருகில் இருக்கும் நகரங்களான நோய்டா, காஜியாபாத், ஹரியானாவின் குருக்கிராம் மற்றும் பரிதாபாத் ஆகிய இடங்களுக்கு செல்ல நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications