சென்னை: யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேத குழுமத்தின் துணை நிறுவனமான பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு, ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் நேரில் வந்து ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் பிரபலமான எஃப்எம்சிஜி நிறுவனங்களில் ஒன்றான பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு சண்டிகரில் உள்ள ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், நேரில் வந்த ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 27.5 கோடி வரி நிலுவை தொடர்பாக, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி இயக்குநரகத்தின் விசாரணையில் குற்றங்கள் நிரூபணமாகும் பட்சத்தில் அதிகபடியான அபராதம் விதிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்-ல், இந்நிறுவனம் ரூ.27.46 கோடி வரி நிலுவையை வட்டியுடன் சேர்த்து செலுத்தாமல் இருப்பது தொடர்பான காரணத்தைக் கேட்டு, பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அதன் முக்கிய நபர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் படி கூறியுள்ளது. சில வரிச் சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கக் கூடாது என்பதையும் இந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனம் ஜிஎஸ்டி புலானாய்வு அதிகாரிகளிடம் தங்களின் காரணத்தைக் கூறி நிறுவனத்தை பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது. எவ்வாறாயினும், நடவடிக்கைகள் முடியும் வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எஃப்எம்சிஜி துறையில் வரி ஏய்ப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் நேரத்தில், இந்த செய்தி வெளிவந்துள்ளது. பதஞ்சலி இதற்கு முன்பும் இதேபோன்ற நோட்டீஸ்-ஐ எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு,பதஞ்சலி குழுமத்தில் உள்ள மற்ற இரண்டு நிறுவனங்களுக்கு முறையற்ற ITC கோரிக்கைகளுக்காக DGGI நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாநில சரக்கு மற்றும் சேவை வரியை (SGST) செலுத்தாதது மற்றும் முறையற்ற வரிதாக்கல் செய்தது தொடர்பான வழக்கு, விசாரணைக்காக உத்தரகாண்ட் ஜிஎஸ்டி அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளி ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விலக்கு அளித்துள்ளது.
நீதிபதி ஹிமா கோலி மற்றும் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா தலைமையிலான அமர்வு, தவறான விளம்பரங்களுக்காக ஏப்ரல் 24 அன்று செய்தித்தாள்களில் இருவரும் பகிரங்க மன்னிப்பு கேட்டதையும் அங்கீகரித்துள்ளது.
மேலும், பதஞ்சலி நிறுவனர்கள் ராம்தேவ் மற்றும் பால்கிருஷ்ணா ஆகியோரின் வழக்கறிஞர்களை, அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்ட நாளிதழின் பக்கத்தை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications