யோகா குரு பாபா ராம்தேவ் யோகாவில் மட்டுமல்ல வர்த்தகத்திலும் பெரிய ஆள்தான். இவருக்கு சொந்தமான பதஞ்சலி குழுமம் சமையல் எண்ணெய், மசாலா, பிஸ்கட் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் என பல துறைகளின் வர்த்தகங்களில் சக்கை போடு போடுகிறது.
இந்நிலையில் வரும் ஆண்டுகளில் தனது மசாலா பிரிவு வர்ததகம் ரூ.1,000 கோடி எட்டும் என்று பதஞ்சலி புட்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும், பிஸ்கட், சமையல் எண்ணெய் வணிகத்தையயும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பதஞ்சலி புட்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தினம் நேற்று நடைபெற்றது. இதில் இந்நிறுவனத்தின் செயல் அல்லாத இயக்குனரான பாபா ராம் தேவ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நிறுவனத்தின் மசாலா பிரிவு வர்த்தகம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல தயாரிப்பு வகையை விரிவுப்படுத்துவதை பார்க்கும்போது, வரும் ஆண்டுகளில் மசாலா பிரிவு வர்த்தகம் ரூ.1,000 கோடி மதிப்புள்ள விற்பனையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2028ம் ஆண்டுக்குள் பதஞ்சலி நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.50,000 கோடி ஈட்டுவதற்கான நிறுவனத்தின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தார்.
முதலீட்டு வங்கியான அவெண்டஸ் கேபிட்டலின் 2021அறிக்கையில், 2025ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பிராண்ட் மசாலா சந்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் மற்றும் ரூ.50 ஆயிரம் கோடியை தொடும். நாட்டில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் பிராண்டட் மசாலா பொருட்கள் பாதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மசாலா சந்தையில் இந்த ஆண்டுதான் பதஞ்சலி புட்ஸ் நிறுவனம் நுழைந்துள்ளது. மசாலா சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும், டாபர் இந்தியா லிமிடெட், ஐ.டி.சி. ஆஷிர்வாத், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட்டின் சம்பந்தன் மற்றும் இமாமி நிறுவனத்தின் மந்த்ரா போன்ற நிறுவனங்களுடன் பதஞ்சலி போட்டியிடும்.
பதஞ்சலி புட்ஸ் நிறுவனம்,தன்னை முழு எஃப்.எம்.ஜி.சி. நிறுவனமாக மாற்றிக் கொள்ள விரும்புகிறது. நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் உணவு பொருட்கள் பிரிவு வருவாய் பங்களிப்பு 28.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சென்ற நிதியாண்டில் 18.4 சதவீதமாக இருந்தது.
பதஞ்சலி புட்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் வருவாயாக ரூ.31,524.66 கோடியும், நிகர லாபமாக ரூ.886.44 கோடியும் ஈட்டியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகததின் இடையே பதஞ்சலி புட்ஸ் பங்கின் விலை ரூ.1,572.75ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications