முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு புதிய தலைமை செயலகத்தை கட்டுவதில் தீவிரமாக இருக்கிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பி கிளம்பியது. இந்நிலையில் மாற்று இடங்களை அரசு பார்த்து வருவதாக தகவல் வெளியான நிலையில், பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க தமிழக அரசு டெண்டர் கோரியிருக்கிறது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் சிதிலமடைந்த வீட்டு வசதி வாரியத்தின் 96 குடியிருப்புகளை இடிக்க தமிழக அரசு டெண்டர் வெளியிட்டிருக்கிறது. இதற்கு மின்னணு டெண்டர் முறையில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு, டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமை செயல்கத்தில் இடம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை மேற்கொண்டு விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் தமிழக அரசு வேறு இடத்தில் சட்டப்பேரவை வளாகத்துடன் ஒருங்கிணைந்த புதிய தலைமை செயலகத்தை கட்டும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையிலேயே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் வாகன நிறுத்துமிடம், ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தர முடியாத நிலை இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏனெனில் இது பாரம்பரிய தளம் என்பதால் கட்டட விரிவாக்கங்களுக்கும் சாத்தியமில்லை. எனவே தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து இடம் மாற்றம் செய்யும் திட்டத்தை விஜய் அரசு முன்னெடுத்துள்ளது. புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய தளமாக பராமரிக்கப்படும் என கூறியுள்ளது.
இதனை அடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கரில் சட்டப்பேரவை வளாகத்துடன் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிட்டது. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே பட்டினப்பாக்கம் திட்டம் கைவிடப்பட்டு மாற்று இடங்களை அரசு தேர்வு செய்யலாம் என சொல்லப்பட்டது. ஆனால் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட அரசு வெளியிட்ட சர்வே எண்ணில் இடம்பெற்றுள்ள வீடு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது.
3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்ற தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளது. எனவே அரசு முதலில் அறிவித்தப்படி பட்டினப்பாக்கத்தில் தான் புதிய தலைமை செயலகம் அமைய உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் தலைமை செயலகம் கட்டும் நோக்கத்தில் இந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications

