சென்னை: ஆந்திரப்பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் நடித்த 'They Call Him OG' திரைப்படம், இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பெற்றது. பவன் கல்யாணின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் பார்க்கப்படும் நிலையில், பவன் கல்யாண் இத்திரைப்படத்தின் இயக்குநருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பவன் கல்யான் கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கிய 'ஹரி ஹர வீர மல்லு' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், ஜூலை மாதம் தியேட்டரில் வெளியாகி மந்தமான வசூலை பெற்று தோல்வியை தழுவியது. இந்த படத்தை தொடர்ந்து சில நாட்களிலேயே இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' திரைப்படம் வெளியானது. தமன் இசையில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் முக்கியமான ரோலில் இப்படத்தில் நடித்திருந்தனர்.

பவன் கல்யாண்: 'ஓஜி' படத்தோட கதை ரஜினி நடித்த பாட்ஷா படம் போல ஒரு மாஸ் திரைப்படமாகும், 70கால கட்டத்தில் ஜப்பானின் தலைநகர் டோக்யோவில் இயங்கி வரும் ஒரு ரகசிய குழுவில் சாமுராய் ஆக பயிற்சி பெற்ற பவன் கல்யாண் அங்கு நடக்கும் மிகப் பெரிய படுகொலை சம்பவத்திலிருந்து தப்பித்து, ஒரு கப்பலில் இந்தியா வருகிறார். கப்பலில் அவருக்கு அறிமுகமாகும் மும்பையை சேர்ந்த பெரிய புள்ளியான பிரகாஷ் ராஜூடன் கூட்டு சேர்ந்து கொண்டு பல அட்டூழியங்களை செய்கிறார். ஒரு கட்டத்தில், மனம் திருந்தும் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜை விட்டு பிரிந்து, பிரியங்கா மோகனை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். அந்த வாழ்க்கை கெடுக்க பல சதி நடக்கிறது. அதில் இருந்து பவன் கல்யாண் தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் என்பது தான் படத்தின் கதை.
சொகுசு கார் பரிசு: பவன் கல்யாணின் மாஸான நடிப்பில் வெளியான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில், உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், பவன் கல்யாண் 'ஒஜி' பட இயக்குநர் சுஜீத்தை பாராட்டும் வகையில், விலை உயர்ந்த சொகுசு காரை பரிசளித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சுஜீத் தனது எக்ஸ் தள பக்கத்தில், கருப்பு நிற லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் படங்களைப் பதிவிட்டு, "இதுவரை இல்லாத சிறந்த பரிசு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறேன். எனது அன்பான ஓஜி, பவன் கல்யாண் சாரிடமிருந்து கிடைத்த அன்பும், ஊக்கமும் எனக்கு மேலும் ஊக்கமளித்துள்ளது. நான் சிறுவயதில் இருந்தே உங்களின் தீவிர ரசிகன் என பதிவிட்டுள்ளார். ஹைதராபாத்தில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் விலை, அதன் வகையைப் பொறுத்து ரூ. 1.29 கோடி முதல் ரூ. 3.18 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பலரும் பவன் கல்யாணின் நல்ல மனதை பாராட்டி இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஓஜி படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் அடுத்ததாக ஹரிஷ் ஷங்கர் இயக்கும் 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு 2026ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications