பிரபலமான பேடிஎம் பிராண்டை இயக்கி வரும் ஓன்97 கம்யூனிகேஷன்ஸின் நிறுவனர் விஜய் சேகர் சர்மா. பேடிஎம் விஜய் சேகர் சர்மா என்று சொன்னால் எல்லோருக்கும் எளிதாக தெரியும். விஜய் சேகர் சர்மா அண்மையில் எக்ஸில் ஒரு செல்பி புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் செல்பி எடுத்தது வேறொரு நிறுவனர் அல்லது முதலீட்டாளர் அல்லது பிரபலம் அல்லது உலக தலைவரோ அல்ல. சில மாதங்களுக்கு தனது நிறுவனத்தை மோசமாக விமர்சனம் செய்த ஒரு நபருடன்தான் விஜய் சேகர் சர்மா செல்ஃபி எடுத்து இருந்தார். அந்த நபர் வேறு யாரும் அல்ல, பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மாதபி பூரி புச்.
2024 ஜூலையில் நிகழ்ச்சி ஒன்றில்,வங்கிகள் ஏற்கனவே கேஓய்சி செயல்முறையை மேற்கொள்வதால், வர்த்தகம் செய்ய அல்லது முதலீடு செய்ய நமக்கு ஏன் மற்றொரு சுற்று கேஓய்சி தேவை என்று செபியின் தலைவர் மாதபி பூரி புச்சிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பேடிஎம் போன்ற கேடு எதிர்காலத்தில் பங்குச் சந்தையை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

3 ஆண்டுகளுக்கு முன் பேடிஎம் ஐபிஓ பெரிய வெற்றி பெற்றது ஆனால் அந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்ட நாள் முதல் சரிவு கண்டது. முதலீட்டாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அதை குறிப்பிட்டுத்தான் பேடிஎம்-ஐ கேடு என்று விமர்சனம் செய்து இருந்தார். அதே மாதபி பூரி புச் தற்போது மகிழ்ச்சியாக சிரித்த முகத்துடன் விஜய் சேகர் சர்மாவுடன் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இது இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்டார்ட்அப் நிறுவனர்களில் ஒருவரான சர்மாவுக்கு நிச்சயம் ஒரு வகையான மீட்பு மற்றும் ஆறுதலாக இருந்திருக்கும்.
2024 ஜனவரி 31ம் தேதியன்று வங்கி ஒழுங்குமுறை ஆணையமான இந்திய ரிசர்வ் வங்கி ஓன்97 கம்யூனிகேஷன்ஸின் துணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் (பிபிபிஎல்) மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. டெபாசிட் பெறுவது, பணப் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்துமாறு பிபிபிஎல் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை இந்நிறுவனத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தியது. இதனையடுத்து, விஜய் சேகர் ராவ், செபி, ரிசர்வ் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட தொடங்கினார். மேலும் புதுமை, வளர்ச்சி மற்றும் வேகத்தை விட ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு இணக்கமாக இருப்பதை முன்னிலைப்படுத்தும் வணிக மாதிரியை உருவாக்குவதில் சர்மா கவனம் செலுத்தி வருகிறார்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications