இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம், தனது முக்கிய முதலீட்டாளர்களான சாப்ட்பேங்க் மற்றும் யாஹூ ஜப்பான் உடன் இணைந்து பேடிஎம் QR பேமெண்ட் சேவையை ஜப்பானில் பேபே (PayPay) என்ற பெயரில் அக்டோபர் 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஜப்பானில் இருக்கும் இந்தப் பேபே சேவை கிட்டதட்ட பேடிஎம் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகவே இயங்குகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்குச் சென்ற பேபே சேவையில் ஜப்பான் நாட்டின் பிற செயலிகளை விடவும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது எனச் சந்தை ஆய்வு தெரிவித்துள்ளது.
ஜப்பான் ஸ்மார்ட்போன் சந்தை
ஜப்பான் நாட்டின் முன்னணி மார்க்கெட்டிங் சந்தை ஆய்வு நிறுவனமான Valuze செய்த ஆய்வில் ஜப்பான் நாட்டின் ஸ்மார்ட்போன் ஆப்களில் அதிக ஆக்டீவ் வாடிக்கையாளர்கள் இருக்கும் செயலிகள் பட்டியலில் பேடிஎம்-ன் பேபே 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
154.6 சதவீதம் வளர்ச்சி
இதுமட்டும் அல்லாமல் கடந்த வருடத்தைக் காட்டிலும் பேபே நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 154.6 சதவீதம் வளர்ச்சி அடைந்து சுமார் 47 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதனால் ஜப்பான் நாட்டின் டாப் 30 செயலிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது பேபே நிறுவனமாக உள்ளது.
பேடிஎம், சாப்ட்பேங்க், யாஹூ ஜப்பான்
பேடிஎம், சாப்ட்பேங்க், யாஹூ ஜப்பான் ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் உருவான இந்தப் பேபே சேவை ஜப்பான் மண்ணில் துவங்கப்பட்டு 13 மாதங்களில் 19 மில்லியன் வாடிக்கையாளர்களை அடைந்த நிலையில் தற்போது154.6 சதவீத வருடாந்திர வளர்ச்சியில் 47 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
போட்டி நிறுவனங்கள்
மேலும் ஜப்பான் நாட்டின் பிற பேமெண்ட் சேவை நிறுவனங்கள் ஆக்டீவ் வாடிக்கையாளர்கள் பட்டியலில் D Pay 17 140.6 சதவீத வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சியில் 17வது இடத்தையும், AU pay 117.9 சதவீத வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சியில் 28வது இடத்தையும் பெற்றுள்ளது.
இதன் மூலம் பேடிஎம்-ன் சேவை மற்றும் சேவை முறை ஜப்பான் மக்களைப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது தெரிகிறது.
டிஜிட்டல் பேமெண்ட் புரட்சி
இந்தியாவைப் போலவே ஜப்பானிலும் தற்போது டிஜிட்டல் பேமெண்ட் புரட்சி தற்போது வெடித்துள்ளது, ஆனாலும் பெரும்பாலான ஜப்பான் மக்கள் பணத்தைக் கொண்டு வர்த்தகம் செய்வதையே விரும்புகின்றனர்.
டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் பணம் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 84 சதவீத ஜப்பான் மக்கள் பணம் மற்றும் காசுகளை வைத்தே வர்த்தகம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் பேண்மெண்ட் எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் கடந்த இரண்டு வருடத்தில் ஜப்பான் நாட்டின் 1000 யென் மதிப்பிற்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் இடத்தில் ஸ்மார்ட்போன் ஆப் அல்லது டெபிட்கார்டு பயன்பாட்டு மூலம் செலுத்தப்படும் எண்ணிக்கை 15.4 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications