இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமென்ட் சேவை நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் புத்தாண்டு நெருங்கும் வேளையில், சுமார் 1000 ஊழியர்களை கொத்தாக பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்களுக்கான நிதி ஆதாரங்கள் 2022 ஜூன் முதல் இன்று வரையில் மேம்படாத காரணத்தால் பல நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ள பணிநீக்கம் செய்து வருகிறது. இதேபோல் பல டெக் நிறுவனங்கள் லாபகரமான நிலையை அடையச் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது.

இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் சுமார் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், பேடிஎம் பணிநீக்கம் செய்யப்பட்டது உறுதி செய்தது. இந்த பணிநீக்க சுற்றில் பேடிஎம் நிறுவனத்தின் ஆப்ரேஷன், விற்பனை, இன்ஜினியரிங் அணியில் அதிகப்படியாக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தப் பணிநீக்கம் குறித்துப் பேடிஎம் செய்தி தொடர்பாளர் பேசுகையில், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நிறுவனத்தின் செயல்திறன் மேம்படுத்தவும், தொடர்ச்சியாகச் செய்யப்பட்டும் செயல்களை AI பயன்படுத்தி ஆட்டோமேஷன் செய்யப்பட்டு உள்ளோம்.
இதன் மூலம் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆப்ரேஷன், விற்பனை, இன்ஜினியரிங் அணியில் இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், இதனால் நிறுவனத்தின் செலவில் 10 முதல் 15 சதவீதம் வரையில் குறையவாய்ப்புகள் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இன்சூரன்ஸ் மற்றும் வெல்த் ஆகியவை தான் எங்களுடைய முக்கிய வர்த்தக இலக்காக உள்ளது, இதேவேளையில் மற்ற வர்த்தகங்களும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதில் கவனம் செலுத்தப்படும் எனவும் பேடிஎம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பேடிஎம் 2021ல் சுமார் 500 முதல் 700 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததது, சமீபத்தில் பேடிஎம் தனது சிறு கடன் திட்டங்கள் மற்றும் BNPL சேவைகளை நிறுத்தியது. இதன் வாயிலாக இப்பிரிவில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கலாம். இந்த அறிவிப்புக்குப் பின்பு பேடிஎம் பெரிய தொகை கொண்ட கடன்களும், வர்த்தகர்களுக்கான கடன் சேவை அளிப்பதில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தவும் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான பேடிஎம் நிறுவனம் தனது ஆதிக்கத்தையும், வர்த்தகத்தையும் நிலைநாட்ட ஒருபக்கம் போராடினாலும் மறுபுறம், முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து லாபத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தகைய பிரச்சனை பங்குச்சந்தையில் இல்லாத ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்களுக்கு இல்லை.

ஆனால் இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதாக மிரட்டும் காணத்தால் ஐபிஓ வெளியிடுவது கட்டாயமாகியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறினால் புதிதாக முதலீட்டைத் திரட்டுவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கடினம், இதனால் ஐபிஓ வாயிலாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீட்டைத் திரட்டிவிட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற வழிவகுக்கிறது.
இதேவேளையில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால் ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்கள் கட்டாயம் லாபத்தைக் காட்ட வேண்டும், இல்லையெனில் பங்கு விலை குறையும், மதிப்பீடு குறையும். வெளிநாட்டு முதலீட்டாளர்களில் பெரு முதலீட்டின் மூலம் அதிகப்படியான விளம்பரம், அதிகப்படியான ஆஃபர் என வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்களுக்கு இது முட்டுச்சந்துபோல் உள்ளது. இத்தகைய நெருக்கடியைத் தான் பெரும்பாலான இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எதிர்கொள்கிறது.
இதேவேளையில் இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் நியூ ஏஜ் டெக் நிறுவனங்களில் பணியாற்று ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தைக் கொடுப்பதும் இத்தகைய பணிநீக்கத்திற்கு வழிவகுக்கிறது. புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத நிறுவனங்களுக்குத் தற்போது இருக்கும் ஓரே வழி அதிக லாபம் அல்லது வருமானம் இல்லாத சேவைகளை மூடுவது, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது, இந்த இரண்டில் தான் செலவுகளைக் குறைத்து லாபத்தைக் காட்ட முடியும்.


Click it and Unblock the Notifications