இந்தியாவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் இந்த நிதியாண்டில் தனது பணியாளர் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போதைய பணியாளர் எண்ணிக்கையில் 15 முதல் 20 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பேடிஎம் நிறுவனத்தில் அதிகரித்து வரும் இழப்புகளைச் சமாளிக்க, 5,000 முதல் 6,300 ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் வருடத்திற்கு ரூ.400-500 கோடி வரை சேமிக்க ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் இலக்கு வைத்துள்ளது.

2023 நிதியாண்டில், நிறுவனத்தின் சராசரி பணியாளர் எண்ணிக்கை 32,798 ஆக இருந்தது. இதில், 29,503 பேர் ஆக்டிவ் ஆக பணியாற்றியவர்கள், மேலும் ஒரு ஊழியருக்குச் சராசரி செலவு ரூ.7.87 லட்சமாக இருந்தது.
2024 நிதியாண்டில், மொத்த பணியாளர் செலவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 34% அதிகரித்து ரூ.3,124 கோடியாக உயர்ந்தது. இதன் காரணமாக, ஒரு பணியாளருக்கான சராசரி செலவு ரூ.10.6 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் வேளையில், செலவுகளை விரைவாகக் குறைப்பதற்கு டிசம்பர் மாதம் 1,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பேடிஎம் சமீபத்தில் தனது முதலீட்டாளர்களுக்குக் காட்டிய அதன் நிதி நிலை அறிக்கையில் தொழில்நுட்பம், வணிகர் விற்பனை மற்றும் நிதி சேவைகள் துறைகளில் செய்யப்பட்ட முதலீடுகளால் பணியாளர் செலவுகள் அதிகரித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், இந்த துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யும் அதே நேரத்தில், பிற துறைகளில் செலவுகளைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், முக்கியமான வணிக பிரிவில் மட்டும் அதிகப்படியான கவனம் செலுத்துதல் மற்றும் சிறப்பாகப் பணிபுரியும் ஊழியர்களை பதவி உயர்வு மூலம் தலைமைப் பொறுப்புகளுக்கு ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனம் தனது செலவு கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில், பேடிஎம் நிறுவனத்தின் ரூ.550 கோடி அளவிலான நிகர இழப்பை எதிர்கொண்டது. இது முந்தைய ஆண்டின் ரூ.168 கோடியுடன் ஒப்பிடும் போது அதிகமாகும். மார்ச் காலாண்டில், ஆப்ரேட்டிங் காஸ்ட் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3% குறைந்து ரூ.2,267 கோடியாக இருந்தது.
இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை அளிக்கும் வகையில், செலவுகளைக் குறைத்து மீண்டும் லாபகரமான நிலைக்கு மாறுவதே இதன் நோக்கமாக உள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சராசரி ஊழியரின் சம்பளம் ரூ.10.6 லட்சமாக இருக்கும் வேளையில், 5,000 முதல் 6,300 ஊழியர்களைக் குறைப்பதன் மூலம் பெரும் தொகையைச் சேமிக்க முடியும். இந்த பணிநீக்கத்தைப் பகுதி பகுதியாகச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications