பெங்களூர்: டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், பல்வேறு துறைகளில் இருந்து தனது பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சமீபத்தில் ஆர்பிஐ பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது எடுத்த அதிரடி நடவடிக்கையில் இருந்து மீளாத ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் தற்போது இந்த பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தின் முறைகேடான பரிமாற்றங்கள், விதிமுறையை முறையாக கடைப்பிடிக்காதது என பல கவனக்குறைவான நடைமுறைகளைக் கண்டறிந்ததை அடுத்து இதன் சேவைகளுக்கு கடுமையான தடையை விதித்தது. இந்த நிலையில் பணிநீக்க அறிவிப்புகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?: பேடிஎம் நிறுவனத்தில் தற்போது நடக்கும் பணிநீக்க நடவடிக்கை ஆண்டுதோறும் நடைபெறும் செயல்பாட்டு மதிப்பீட்டின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பர்பாமென்ஸ் ரிவ்யூவ்-ன் ஒரு பகுதியாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
பணியாளர் குறைப்பு எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், கடந்த இரண்டு வாரங்களில் சில துறைகளில் 20 சதவீதம் பணியாளர்கள் வரையில் குறைக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனத்தின் விளக்கம்: இதுக்குறித்து பேடிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் தற்போது நடைபெற்று வரும் அப்ரைசல் சைக்கிள் நடைமுறையில், செயல்பாட்டுத் திறன் அடிப்படையில் சிலர் பணி நீக்கம் செய்யப்படலாம். என்றாலும், எண்ணிக்கை உறுதிப்படுத்த முடியாது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆட்டோமேஷன் முறைகளை நோக்கி நிறுவனம் நகர்வதால், இந்த அப்ரைசல் சைக்கிளில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.
பேடிஎம் ஊழியர்கள்: பேடிஎம் நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கை இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் அதிகப்படியான ஊழியர்களை PIP-யில் அமரவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அடுத்த சில மாதத்தில் கூடுதலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளது.
பேடிஎம் நிறுவனத்தில் டிசம்பர் 2023ல் சுமார் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய பணிநீக்கம் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத பணிநீக்கத்திற்கு முக்கியமான காரணம் AI. இதை தொடர்ந்து ஜனவரி மாதமும் பேடிஎம் நிறுவனத்தில் silent layoffs நடந்ததாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications