பல்வேறு சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (PPBL) நிறுவனத்திற்கு புதிய பிரச்சனையாக, பண மோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் 5.49 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதியியல் நுண்ணறிவு பிரிவு (FIU), பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் (மோசடியாளர்கள்), ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

நிதியியல் நுண்ணறிவு பிரிவு (FIU), சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சில நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நெட்வொர்க் குறித்து மத்திய அமலாக்க அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடுத்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனம் மீது ஆய்வு நடத்தியுள்ளது.
இந்த மோசடி நிறுவனங்கள் நடத்திய சட்டவிரோத செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணம், பேடிஎம் வங்கி கணக்குகள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதை பேடிஎம் நிர்வாகம் கவனிக்காமல் இருந்தது பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு 5.39 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. வாடிக்கையாளர் கணக்குத் தகவல்களை முழுமையாக அறிந்துகொள்வது (KYC) தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகளைப் பின்பற்ற தவறியதே இதற்குக் காரணம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், பணம் செலுத்தும் நிறுவனங்களை ஆய்வு செய்யவோ, அவற்றின் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவோ பேடிஎம் நிறுவனம் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணம் செலுத்துதல் மற்றும் பயனாளர் கணக்குகள் தொடர்பாக பண மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் கணக்குத் தகவல்களை முழுமையாக அறிந்துகொள்வது (AML & KYC) ஆகிய விதிமுறைகளை பேடிஎம் நிறுவனம் பின்பற்றவில்லை என்று FIU குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம், அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) மீறவில்லை என்று கண்டறியப்பட்டது. பரிவர்த்தனை மோசடி தொடர்பான புகார்களின் பேரில், ரிசர்வ் வங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டது. பின்னர், இந்த உத்தரவு மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications